Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

காந்தி யார்
வெ. சாமிநாத சர்மா




1.  காந்தி யார்
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  அணிந்துரை
    4.  வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
    5.  பதிப்புரை
    6.  நுழையுமுன்…
    7.  பிரசுராலயத்தின் வார்த்தை
    8.  காந்தி யார்?
    9.  மகா புருஷன்
    10. அந்தகாரத்தினிடையே ஒளி
    11. பின்பற்றுவோர் தேவை
    12. பாரத ஜாதியின் ஆத்மா
    13. ரவீந்திரநாத் தாகூரின் அஞ்சலி
    14. கணியம் அறக்கட்டளை


காந்தி யார்

 

வெ. சாமிநாத சர்மா

 

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : காந்தி யார்

  தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 2

  ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2005

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 10.5 புள்ளி

  பக்கம் : 20 + 212 = 232

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 145/-

  படிகள் : 500

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : இ. இனியன்

  அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017, தொ.பே. 2433 9030


அணிந்துரை

எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.

அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.

ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன.

இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.

83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன.

அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.

காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

  இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம்,
  சென்னை - 600 033.
  பெ.சு. மணி


வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்

தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.

தமிழ்த் தென்றல் திரு. வி.க. மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.

இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.

போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.

சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடு களின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதிய வரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.

சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர் களுக்கு இது நன்கு விளங்கும்.

காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!

எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.

எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!

  6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி
  புதுக்கோட்டை - 622 002.
  டோரதி கிருஷ்ணமூர்த்தி


பதிப்புரை

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக் கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய் மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.

தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.

சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர் களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலை முறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.

தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது.

சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.

முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.

தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.

அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.

பதிப்பாளர்


நுழையுமுன்…

மோதிலால் நேரு

-   பண்டித நேருவின் தந்தை. வீரத்தின் விளைநிலம். தியாகத்தின் திருவுருவம். காந்தியடிகளையும், நேருவையும் வெளிஉலகுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைக் குரியவர். இந்திய விடுதலை வரலாற்றை வளர்த்தெடுத்து பண்படுத்தியவர்களில் இவரின் பங்கு அளப்பரிது.

-   இந்திய விடுதலை இயக்கத்திற்கு மூளையாகத் திகழ்ந்தவர். இந்திய அரசியல் வாழ்வில் தோன்றிய அரசியல் விற்பன்னர் களில் முதன்மையானவர். ஏற்றுக் கொண்ட இலக்கிற்கு உருவமும், அழகும் கொடுத்தவர். தனது அழகு மாளிகை யாம் ஆனந்த பவனத்தை இந்திய விடுதலை வேள்விக்கு ஈகம் செய்தவர்.

-   இளமையில் செல்வ செழிப்பில் வாழ்ந்த சீமான். முதுமையில் இந்திய நாட்டின் விடுதலை வேள்விக்குத் தன்னையும் தன் குடும்பத்தையும் ஒப்புவித்தவர்;

-   சீரோடும் செல்வச் செழிப்போடும் கூடிய வாழ்வை உதறித் தள்ளியவர். தரையை மெத்தையாகவும், கையைத் தலை யணை யாகவும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

-   பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த இந்தியத் தலைவர் களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இன்னும் என்ன? உள்ளே படியுங்கள்; உள்ளத்தை உருக்கும் செய்தியை நெஞ்சில் நிறுத்துங்கள்.

-   இந்திய விடுதலை என்னும் இலக்கை அடைவதற்கு இளையருக்கும், முதியவர்க்கும் சிறந்த அணுகுமுறையைக் காட்டிச்சென்ற தொலை நோக்குச் சிந்தனையாளர்.

-   இந்திய விடுதலையாளர்களின் பார்வையில் சிற்பியாய்ப் போற்றிப் புகழப்பெற்றவர்.

-   சேர்த்த பெரும் செல்வத்தை நாட்டுக்காக செலவிட்டவர். தம் அருமருந்தன்ன ஒரே மகனாம் பண்டித நேருவையும், தம் குடும்பத்தையும் நாட்டுக்காக விட்டுச் சென்றவர்.

-   உள்ளும் புறமும் ஒத்த சிந்தனையாளரின் உறுதியையும், அஞ்சாநெஞ்சம் உள்ள பெருமகனின் அருங்குணங்களையும் படியுங்கள்; படிப்பினைப் பெறுங்கள்.

பாலகங்காதர திலகர்

-   சுய ஆட்சி எனது பிறப்புரிமை; அஃதெனக்கு வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் விடுதலை விதையை ஊன்றியவர்.

-   மராட்டிய மண்ணில் பிறந்த இவர். இந்திய விடுதலைப் போருக்கு அணிகலனாக இருந்து அழகு சேர்த்தவர். மராட்டிய மண்ணில் இந்திய விடுதலைப் போருக்காகப் போராடி மடிந்த வீரமறவர்கள் பற்றி விழாக்கள் எடுத்து விடுதலைப் போருக்கு உணர்ச்சியூட்டி இளங்காளை களைப் போருக்குத் தூண்டியவர்.

-   மராட்டிய மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டியவர். பகட்டு ஆரவாரம் அற்றவர். மாந்தப் பிறப்பின் நோக்கம் பிறருக்கு உதவு வதற்கே என்ற மனப்போக்கு உடையவர்.

-   இளமைத்தொட்டு நாட்டுப்பற்றும் இந்துசமயப்பற்றும் மிக்கவராய் இருந்தவர். கணிதத்தில் பேரறிவு பெற்றவர்.

-   இந்தியர்கள் மேன்மையுற ஒழுக்கக் கல்வியை அறிவுறுத் தியவர். உழைப்பாளிகளின் தலைவர்.

-   போர்க் குணம் மிக்க தலைவர்களுள் ஒருவர். தம் வாழ்நாள் முழுவதும் அந்நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தவர்.

-   இந்தியா முழுவதும் - தமிழகத்தில் பாரதியார் உட்பட ஒரு பெரும் அறிவுப் பட்டாள இளைஞர்களை இந்திய விடுதலை வேள்விக்காகச் செதுக்கியவர்.

-   தலை சிறந்த இதழாளர்; பாடம் சொல்லிக் கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்; சமசுகிருத மொழியாராய்ச்சி யாளர்; சட்ட நுணுக்கங்களை இந்திய வழக்குரைஞர் களுக்குக் கற்றுத் தந்தவர்.

-   இந்திய விடுதலை வரலாற்றில் திலகரின் இடம் பெரிது. அதை இந்தச் சிறிய நூல் அழகு மணிகளாகத் கோத்துத் தருகிறது.

-   திலகரின் வீர வாழ்க்கை என்ற அணையா விளக்கை நூலுள் சென்று காணுங்கள் - படியுங்கள்.

காந்தி யார்?

-   காந்தி - அவர் ஒரு ஞானிபோலிருக்கிறார். ஆனால் உலகமெல்லாம் அவருக்கு குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும் பொருளும் வேண்டு மென்று பிச்சை கேட்கி றார், ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான ஏழை மக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக்கணக்கானவர் களுடைய நிரந்தர உபவாசத்தை தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர் களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்று கோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்குத் தாம் ஓர் ஊன்று கோலாயிருக்க வேண்டுமென்ற ஆவலினால். அவர் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப் படுகிறார். ஆனால் அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத்தான் வணங்குகிறார்.

-   இந்திய மக்களுக்குத் தந்தையாக இருந்து இந்திய விடுதலைப் போரை வென்றெடுத்தவர் மகாத்மா காந்தி. இந்தப் பெயர் இன்று உலகெங்கும் போற்றிப் புகழப் பெறும் பெயராக உள்ளது.

-   வீரர்களுக்கும், மகான்களுக்கும் உள்ள திண்மையும், தண்மையும் காந்தியடிகளிடத்து மிகுந்து காணப்படுகிறது.

-   தம்மைச் சுற்றியிருந்த எளியமாந்தர்களையும், வீரர்களாக வும் மகான்களாகவும் ஆக்கிய வியக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்.

-   இந்தியப் பெரு நிலத்தின் அரசியல் ஆசான் கோகலே அவர்களால் காந்தியடிகள் என்று புகழப் பெற்றவர்.

-   நாட்டின் நலனில்தான் தம் நலன் அடங்கி இருக்கிறது என்பதைப் பலமுறை தம் செயல்களால் காட்டியவர்.

-   உலக நாடுகளில் நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத் திற்குக் காந்தியடிகள்தான் முதன்மையானவர் என்று இந்நூல் பதிவு செய்கிறது.

-   தாய்மொழி மூலம்தான் ஒருநாட்டின் பெருமையையும், தன் மதிப்பையும் உயர்த்திக்காட்ட முடியும் என்பதில் காந்தியடிகள் அழுத்தமாக இருந்தார் என்பது தெரிகிறது.

-   இவருடைய வாழ்க்கை வீர வாழ்க்கை; விதியை எதிர்த்துப் போராடிய வாழ்க்கை; வலிமைப்படைத்த ஆங்கில வல்லாண்மையை எதிர்த்துப் போராடிய வாழ்க்கை.

மாந்தத் தன்மையின் உச்சியில் இருந்தவர். ஒழுக்கம் இவரின் உயர்நிலைக்கு அடித்தளம்.

-   தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையை உயிரினும் மேலாகக் கொண்டவர். அதற்காக உழைத்தவர்.

-   தம் பொது வாழ்க்கையில் கொள்கைகளுக்கு மாறாக குடும்பம் இருந்தால் குடும்ப உறவையே துண்டித்துக் கொள்ளும் அளவிற்கு மனஉறுதி உடையவராகத் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டவர்.

-   பாமரமக்களையும் அரசியலுக்குக் கொண்டு வந்து அவர் களுக்கும் அரசியலில் உரிமை உண்டு என்பதை இந்திய நாட்டு மக்களுக்குக் கண்டு காட்டியவர்.

-   வெளிநாட்டுப் பொருள்களைப் புறம்தள்ளி, உள்நாட்டுப் பொருள் களுக்கும், உள்நாட்டுத் தொழில்களுக்கும் முன்னுரிமை அளித்தவர்.

-   இந்திய மக்களுக்கு அச்சம் விலக்கி அரசியல் உணர்வு களைத் தூண்டியவர்.

-   உறங்கிக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி உலக அரசியல் அரங்கில் ஒளிவிட வைத்தவர்.

-   காந்தியின் வாழ்க்கை வளமுடைய அகன்ற காவிரி. நட்ட நாற்று ஒவ்வொன்றும் ஆற்று நீர்ப் பாய்ச்சலால் ஓராயிரம் நெல்மணி களைக் கொண்டுவருவதைப்போல, காந்தி போன இடமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய விடுதலைக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர்.

-   மாந்தனின் வரலாறு மகானின் வரலாறாகப் மாறிய தெப்படி? படிப்பதற்காக - பாதுகாப்பதற்காக இந்நூல் உங்கள் கைகளில்!

காந்தி - சவகர்

-   சவகர்லால் நேரு, மோதிலால் நேரு பெற்றெடுத்த பெருமகன்; இந்தியப் பேரரசின் முதல் தலைமை அமைச்சர்.

-   இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அடித்தளம் அமைத்தவர்; விடுதலைப்பெற்ற இந்தியாவின் முதல் அரசியல் சிற்பி. காந்தியடிகள் ஒரு வித்து-வித்திலிருந்து தோன்றிய முளை சவகர்லால் நேரு.

-   இருவரும் ஆங்கில வல்லாண்மையின் சட்டத்தை மீறிய வர்கள். இருவரும் சட்ட வல்லுநர்கள். இருவரும் ஈகத் தீயில் வெந்தவர்கள். இருவரும் அன்னையரின் வளர்ப்பால் பொதுவாழ்வில் புடம் இட்ட பொன்னாகத் திகழ்ந்த வர்கள். காந்தியடிகள் நீறு பூத்த நெருப்பு-சவகர்லால் நேரு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு.

-   இருவரும் இந்திய நாகரிகத்தின் உண்மைத் தொண்டர்கள். இவ்விருவரின் மனைவியரும் கணவன்மார்களின் முன் னேற்றத்திற்குத் துணை இருந்தவர்கள்; துன்பங்களைத் தூக்கிச் சுமந்தவர்கள்.

-   தம் சொந்தத் துன்பங்களை மறந்து நாட்டு மக்களின் விடிவிற்கு இவர்கள் விதைத்த விதைதான் இன்றளவும் இந்தியப் பெருநிலத்திற்குக் குன்றாத பெருமையைத் தந்து கொண்டுள்ளது.

-   நைனிடால் சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு சவகர் எழுதிய கடிதம் உலக வரலாற்றில் இடம் பெற்றது. தமிழில் இவரின் கடிதங்கள் இந்திய சரித்திரம் எனும் நூலாக வெளிவந்துள்ளது. வளரும் இளந்தமிழ் மறவர்கள் படிக்க வேண்டிய உலக வரலாற்றுப் பெட்டகம்.

-   கத்தூரிப்பாயின் கணவர், இந்திராவின் தந்தை என்ற தொடர்களின் மூலம் காந்திக்கும் நேருவுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டியுள்ளார் ஆசிரியர் சர்மா. மேலும் படியுங்கள்.

-   பொன்னைத் தொட்ட கை; இந்திராவைத் தூக்கிச் சுமந்த இனிய தோள்; கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு மண் வெட்டிய கைகள் என்ற தொடர்கள் நேருவின் பெருமைக்குப் புகழ் சேர்க்கும் வரிகளாகும்.

-   சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு முழக்கங்கள் தொடர்பான வற்றிலும் குமுகாயக் கொடுமைகளைக் களைவதிலும் இருவருக்கும் உள்ள வழிமுறை களும் வேறு வேறானவை என்பது இந்நூல் வழி அறியும் செய்தி யாகும்.

-   வாழ்க்கையில் இருவரும் குருதியும், குருதி நாளமுமாகத் திகழ்ந் தார்கள். தலைமைப் பண்பாளர்களாதலால் தம் கருத்து வேற்றுமையால் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது வாழ்ந்தார்கள்.

-   அதனால்தான் இன்றைக்குக் காந்தியச் சிற்றூரும் இருக்கிறது. நேருவின் கனவாம் தொழில்நுட்ப பெரு வளர்ச்சியும் இருக்கிறது.

-   இந்நூல் இருவரின் பண்புகளையும் துலாக் கோலின் இரு தட்டு களிலும் கலைநயத்தோடு நிறுத்து துல்லியமாக அளவிடுகிறது.

-   விடுதலை வெளிச்சமில்லாத ஒரு நாட்டின் மக்கள் வெளி நாடுகளில் எவ்வளவு கீழ்நிலையில் கருதப்படுகிறார்கள் என்ற உள்ளத்தை உறுத்தும் செய்திகள் தமிழர்கள் எண்ணத்தக்கன; சிந்திக்கத்தக்கன.

-   பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த தங்கக் கட்டியை ஈகம் என்னும் தீயில் வைத்துச் சுட்டு சவகர் என்னும் அணிகலனாக இந்தியத் தாய்க்குச் சூட்டியுள்ள பொற் கொல்லர் காந்தியின் பெருமையையும், அணியாக அமைந்த சவகரின் பெருமையையும் படியுங்கள். தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டியவை எவை என்பதை நினையுங்கள்.

காந்தியும் விவேகானந்தரும்

-   செம்பொன் மேனி, சிறிய உருவம், உடைந்த பல், உரத்த சிரிப்பு, ஒற்றையாடை, மூப்படைந்த இளைஞர், ஓய்வறியா உழைப்பாளி - இவர்தான் காந்தி.

-   நெடிய உருவம், அகன்ற நெற்றி, பரந்த கண்கள், ஒளிவீசும் பார்வை, மிடுக்கான நடை, அரசாளவேண்டியவர், ஆனால், துறவாடை அணிந்த துறவி. உலகத்தைத் துறக்காது உலகத்துக்காக வாழ்ந்தவர் இவர்தான் விவேகானந்தர்.

-   முன்னவர் கரும யோகி- பின்னவர் ஒரு ஞான வீரர்; முன்னவர் ஒரு காட்டுத் தீ - பின்னவர் பொறிகிளம்பாத அனல் பிழம்பு; முன்னவர் கோடைக்காலத்து இடி- பின்னவர் கார்காலத்து மழை; முன்னவர் உறுமும் அரிமா- பின்னவர் கூவும் குயில்.

-   முன்னவர் தொண்டுச் செய்ய பிறந்தவர் - பின்னவர் சமயத்தால் மக்களை ஆளப்பிறந்தவர்; முன்னவர் சிறையைத் புனிதப் படுத்தியவர் - பின்னவர் துறவைப் பெருமைப் படுத்தியவர்.

-   இருவரும் அரண்மனைகளில் கொண்டாடப்பட்ட போதும் குடிசையிலேயே வாழ்ந்தவர்கள்.

-   இருவரும் இந்திய நாட்டுப் பெருமையைக் காப்பாற்றி யவர்கள்; இருவரும் மேலைநாட்டாரால் பாரட்டப் பட்டவர்கள்.

-   முன்னவர் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டவர். பின்னவர் வாழ்க்கையைத் துறந்து சென்றவர். இன்னும் எவ்வளவு ஒற்றுமையும் வேற்றுமையும்! நூலைப் படியுங்கள்.

-   முன்னவர் ஒரு வழக்கறிஞர் - பின்னவர் ஒரு துறவி; முன்னவர் இந்தியர்களுக்குத் தன்மதிப்பு உணர்ச்சியை ஊட்டியவர் - பின்னவர் இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.

-   முன்னவர் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசியலை வெறுத்தவர் - பின்னவர் அரசியல் இல்லா விட்டால் அறவாழ்வு வெற்றிபெறாது என்றவர்.

-   இருவரும் இந்து மதப்பற்றாளர்கள். மதம் குமுகாயத்தின் உயர்வுக்கு தேவை என்று விரும்பியவர்கள். ஆனால் இன்று இந்தியாவில் மதவெறியின் கொடுமை அரங்கேறியுள்ளது. இதனை அகற்றுவதற்கு இந்தச் சூழலில் காரல்மார்க்சும், தந்தைப் பெரியாரும் இல்லையே என்ற கவலை மேலோங்கி யுள்ளது.

-   விவேகானந்தர் பண்படுத்திய அஞ்சாமை என்னும் நிலத்தில் காந்தியடிகள் அமைதி என்னும் விதையை ஊன்றினார். தீண்டாமை என்னும் கொடிய நோயைத் தீர்க்கும் மருத்துவர் களாக இருவரும் இருந்தனர்.

-   விவேகானந்தரின் உலகப் பெருமைக்கு இராமநாதபுரம் மன்னர் பாகர சேதுபதியும், காந்தியடிகள் ஒற்றை யாடை அணிவதற்குச் சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணும் காரணம் என்பதும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

-   கிழக்கில் பேரோசை செய்யும் வங்காள விரிவிகுடா ஓரத்து வங்க மாநிலத்தில் பிறந்த நரேந்திரன் என்ற இயற் பெயருடைய விவேகானந்தர் ஒருபுறம்.

-   மேற்கில் அரேபிய குதிரைகளைப் போல பேரலைகளைக் கொண்ட குசராத் மாநிலத்தில் பிறந்த கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயருடைய மகாத்மா மற்றொரு புறம்.

-   இப்பொழுது படிப்பாளர்களை இவர்களின் இடையே நிறுத்தி யிருக்கிறது இந்நூல். நூலுள் நுழையுங்கள். இரு பெரும் மா மாந்தர்களை நினைவில் கொள்ளுங்கள்!

நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ பெ.சு. மணி,

  _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர்,

  _புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன்,

  _முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு.,_ ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்

  _மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்

  _அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய்

  _மெய்ப்பு_ வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா

  _எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்

இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .


பிரசுராலயத்தின் வார்த்தை

இரங்கூனில் சிறந்த முறையில் நடந்துவந்த ஜோதி பத்திரிகையின் ஆசிரியர் எங்கள் சர்மாஜீ தமிழனின் சிந்தனையைத் தூண்டும் பல தலையங்கங்களை அதில் எழுதி வந்தார்கள். அவை களில், ஒவ்வொரு வருடமும் காந்தியைப் பற்றி எழுதியவைகளை மட்டும் தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றுள் காந்தி யார் என்ற முதல் அத்தியாயம் ஏற்கனவே முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்பொழுது புதிதாகச் சேர்த்திருக்கிற ஐந்து அத்தியாயங்களில், கடைசி அத்தியாயம் ஆசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு ஜோதியில் வெளிவந்ததாகும். அவ்வப் பொழுது எழுதிய இந்தத் தலையங்கங்களை வாசகர்கள் படிக்கும் பொழுது ஆசிரியரின் அரசியல் தீர்க்கதரிசனத்தையும் இந்தியாவின் தேவை களையும் உணர சாத்திமாயிருக்குமென நம்புகிறோம்.

காந்தியடிகள் உயிரோடிருந்த காலத்தில் இவை எழுதப் பட்டன வென்பதை நினைவில் கொண்டு இந்நூலைப் படிக்குமாறு அன்பர்களை வேண்டுகிறோம்.


காந்தி யார்?

எழுபத்திரண்டு சதுர மைல் விதீரணமுள்ள வாழ்க்கை யென்னும் யுத்த மைதானத்தில், அன்பு, அஞ்சாமை என்ற இரண்டு ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, முகத்திலே புன்சிரிப்புத் தவழ, கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு போர் வீரனாகக் காட்சி யளிக்கிறார் காந்தியடிகள் இன்று நமக்கு. இந்த எழுபத்திரண்டு வருஷ காலத்தில், அவர் எத்தனையோ போர்களை நடத்தி யிருக்கிறார்; எத்தனையோ பேரைத் தாக்கியிருக்கிறார்; எத்தனையோ பேரால் தாக்கப்பட்டுமிருக்கிறார். ஆனால் அவர், தமது முகத்தில் சலிப்புக் காட்டியதோ, அகத்தில் வன்மம் கொண்டதோ கிடையாது. யுத்தத்தில் சகஜமாக ஏற்படக் கூடிய அநேக காயங்களை அவர் பட்டிருக்கிறார். ஆனால், எல்லாம் மார்பிலே தான். அவருடைய முதுகிலே ஒரு வடுவைக் கூடக் காண முடியாது. அப்படியே, எதிரி களைத் தாக்குகிறபோதும், அவர் களுடைய மார்பிலேதான் காய முண்டுபண்ணினாரே தவிர, அவர்களுடைய முதுகுப்பக்கம் ஓர் அடி கூடக் கொடுத்ததில்லை. மற்றும், சத்துருக் களின் தனிமையையோ, அசதியையோ, அசட்டு அகங்காரத்தையோ அவர், தமது வெற்றிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டதில்லை. எதிரிகளுடைய பலவீனத்தின் மீது வெற்றிக் கொடி நாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் சந்தர்ப்பவாதி யாக இருக்கவில்லை; இருக்க மறுத்துவிட்டார். ஒரு யுத்த வீர னுடைய லட்சணத்தினின்று அணுவளவு பிறழவும் அவர் சம்மதிக்க வில்லை. இப்படிப்பட்ட யுத்த வீரனாகிய அவர், இன்று, தமது ஜீவன யாத்திரையின் எழுபத்து மூன்றாவது மைற்கல்லையடைந் திருக்கிறார். அவரை நாம் வாழ்த்தி வணங்குவோமாக.

காந்தியடிகளின் வாழ்க்கையைச் சதுரமைல் கணக்கில் தான் மேலே நாம் வருணித்திருக்கிறோம். ஏன் தெரியுமா? அவருடைய வாழ்க்கை, எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகிக் கொண்டு போகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அகலமாகியும் கொண்டுபோகிறதினால்தான். உலகத்திலே தோன்றிய மகான்கள் பலருடைய வாழ்க்கை வரலாறு களை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், ஒன்று நீளமாக வாவது இருக்கும்; அல்லது அகலமாகவாவது இருக்கும். இரண்டும் ஒன்று சேர்ந்திருக்கக் காண்பது அரிது. சங்கராச்சாரியாரென்ன, விவேகானந்தரென்ன, இப்படிப்பட்டவர் களுடைய வாழ்க்கை யெல்லாம் நீளமான வாழ்க்கையல்ல; அகன்ற வாழ்க்கை. ஆனால், புத்தர் பிரானுடைய வாழ்க்கை, நீளமும் அகலமும் சேர்ந்த சதுர வாழ்க்கை. அது போலவே காந்தியடிகளுடைய வாழ்க்கையும் சதுர வாழ்க்கையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே யாருடைய சதுர வாழ்க்கையும், தனித்துவமும் மகத்துவமும் பொருந்திய தாகவே இருக்கும். இன்று காந்தியடிகளுடைய திரு நாமம் உலகத்தில் எதிரொலியுடன் முழங்கிக் கொண்டிருக்கிற தென்று சொன்னால், அஃது அவருடைய புனித வாழ்க்கைக்குத் தானே தவிர, அவருடைய தளர்ந்த உடலுக்காகவல்ல; குறுகிய உருவத்திற்காகவல்ல. அவர், மகா மேதாவியுமல்ல; அவரைவிடச் சிறந்த அறிஞர்கள், உலகத்தின் நானா பாகங்களிலும் ஆயிரக்கணக் காக இருக்கிறார்கள். அல்லது அவருடைய உறுதியான கடவுள் நம்பிக்கை, அவரை இந்த உன்னத பதவியில் கொண்டுவைத்திருக்கிற தென்றும் சொல்ல முடியாது. அறுபத்துமூன்று நாயன்மார்களை யும், சூரதாஸையும், கபீரையும், மீராபாயையும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கான பேரையும் கண்ட பாரத தேசத்திற்கு, காந்தியடி களின் கடவுள் நம்பிக்கை ஒரு புதுமையுமல்ல; விசேஷமுமல்ல. எத்தனையோ பக்தர்களைப்போல் அவர் ஒருவர். அவ்வளவுதான்.

இப்படி அவர் ஒரு சாதாரண மனிதராகக் காணப்பட்ட போதிலும், உலகத்திலுள்ள அறிஞர்களெல்லோரும் அவருக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள்; பக்தர்களெல்லோரும் அவரைப் பூஜிக்கிறார்கள்; பயில்வான் களெல்லோரும் அவர்முன்னே, நூற்றுப் பன்னிரண்டு பவுண்ட் நிறையுள்ள அவர் முன்னே, கைகட்டி நிற்கி றார்கள்; அழகுத் தெய்வங்களெல்லாம், அவருடைய பொக்கை வாய்க்கு முன்னே வாய்பொத்தி நிற்கின்றன; நாவலர்களெல்லோரும் அவருடைய மௌனத்திற்கு முன்னே நாவடங்கி நிற்கிறார்கள்; ஆனால், அவர் நாவசைந்தால் நாடு அசைகிறது. இவை மட்டுமா? மேற்படி அறிஞர்களும், பக்தர்களும், பயில்வான்களும், நாவலர் களும், இன்னோரன்ன பலரும் அவருடைய திருமுன்னர், தங்கள் தங்கள் கலைத்திறமை, தொழில் திறமை முதலியவைகளைக் காட்டி அவருடைய ஆசிர்வாதத்தைப் பெறப் போட்டி போடுகிறார்கள்; அந்த ஆசிர்வாதத்தைக் கொண்டு பிரகாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பிரகாசிக்கிற பிரகாசந்தான் உண்மையான பிரகாசமென்று, சாசுவதமான பிரகாச மென்று நம்புகிறார்கள். இஃதென்ன வேடிக்கை!

1927ஆம் வருஷம், மகாத்மா காந்தி, தேக அசௌக்கியங் காரணமாக, பெங்களூருக்கு வந்திருக்கிறார். குமாரா பார்க் என்ற மாளிகையில் மைசூர் அரசாங்கத்தார் அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து உபசரித்து வருகிறார்கள். ஒரு நாள் காலை நேரம். அடிகளார், தமது அறையில் கட்டிலொன்றின் மீது சாய்ந்த வண்ணம் படுத்திருக்கிறார். அவருடைய புகழொளியைக் கண்டு வெட்கப்பட்டோ என்னவோ, சூரியன், ஜன்னல் வழியாக அவரை எட்டி எட்டிப் பார்க்கிறான். அடிகளின் முகம் மலர்ந்திருக் கிறது. அப்பொழுது ஆறரை அடி உயரமுள்ள ஒரு கம்பீர உருவம் உள்ளே நுழைந்தது. நரைத்த தாடி மீசை. முற்காலத்து முனிவர்கள் போன்ற முகத் தோற்றம். அந்த முகத்தில் அறிவும் சாந்தமும் குலவிக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்த அந்த வடிவம், சாய்ந்து படுத்திருந்த உருவத்தை மூன்று முறை வலம் வந்தது. பின்னர் சாஷ்டாங்கமாக நமகாரஞ் செய்துவிட்டு, கூப்பிய கையோடு, பக்தி மேலீட்டால் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிக் கொண்டிருக்க, இமய பர்வதம்போல் அசையாது நின்று கொண்டிருந்தது. ஆஜானுபாகு வான அந்த உருவத்தைப் பார்த்துக் காந்தியடிகள் என்னை இப்படிப் பரிகசிக்கலாமா? தங்களுடைய அறிவுக் கோயிலின் நுழைவாயிலில் கையேந்தி நிற்கும் ஒரு பிட்சுகன் அல்லவா நான்? என்றார். அப்படிச் சொல்லக்கூடாது. தாங்கள் ஒரு சமுத்திரம். அதிலிருந்து தெறிக்கும் ஒரு திவலை நான். ஆத்ம சக்திக்கு முன்னே அறிவு எம்மாத்திரம்? சூரியன் முன்னே மின்மினிப்பூச்சி மாதிரி. என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நான் இங்கு வந்தேனேயன்றி, தங்களைத் தொந்தரவு படுத்துவதற்காக வல்ல என்றது வேத ஒலியின் எதிரொலி போன்ற அந்தக் குரல். இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், காந்தியடிகளின் கண்களில் நீர் ததும்பியது. வணங்கி நின்ற அந்த உருவமும், மௌனமாக விடை பெற்றுக் கொண்டு, அறையை விட்டு வெளியே சென்று விட்டது. இந்தக் காட்சியை நாம் எத்தனை தரம் நமது அகக்கண்ணால் தரிசித்தாலும் அத்தனை தரமும் நமது உள்ளத்தில் ஊறாத அமிழ்து ஊறி நம்மைப் பரவசப்படுத்து கின்றது. வணங்கிய அவர் யார்? அப்பொழுது மைசூர் சர்வ கலா சாலையின் வைசான்ஸலராக இருந்த ஸர் வ்ருஜேந்திர நாத சீலர்; உலக அறிஞர்களிலே ஒருவர். சகல கலைகளிலும் அவருக்குள்ள புலமையைப் பாராட்டு முகத்தான் அவரைச் சாதாரணமாக நடக்கும் அகராதி என்று நண்பர்கள் அழைப்பார்கள். ஸர் ஜகதீஸ சந்திரபோ, ஸர் பிரபுல்ல சந்திர ரே, ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி முதலிய அறிவு அரசர்களெல்லோரும், வ்ருஜேந்திரநாதசீலரை, தங்க ளுடைய அறிவுச் சக்ரவர்த்தியாகப் போற்றி வந்தார்கள். ஆனால், இந்த அறிவுச் சக்ரவர்த்தி, அந்தச் சத்தியாத்மாவுக்கு முன்னே அடங்கி ஒடுங்கி நின்றார். இப்படி இந்திய நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல, மேல்நாட்டு அறிஞர்களான ஆல்பர்ட் ஈன்டீன், கில்பர்ட் முர்ரே, சி.இ.எம். ஜோட், பெர்ரிடேல் கீத், கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் முதலிய பலரும் அவருக்குத் தங்களாலான காணிக்கையைச் செலுத்திய வண்ணமிருக்கிறார்கள்.1 இஃதென்ன புதிர்!

இங்கிலாந்தில் மி மாட் ராய்டன் என்ற ஓர் அம்மையார். கிறிதுவ ஞானிகளின் கூட்டத்திலே இவருக்கு அதிக மதிப்பு உண்டு. காந்தியடிகள், 1931ஆம் வருஷம் வட்ட மேஜை மகா நாட்டை முன்னிட்டு லண்டனுக்குச் சென்றிருந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மண்டபத்திற்கு வெளியே வந்தார். பிறகு நடைபெற்றதை மேற்படி மாட் ராய்டனே வருணிக்கட்டும்:-

அவரை ஏராளமான ஜனங்கள் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள். என்னுடைய மோட்டார் எங்கேயிருக்கிறதென்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவருக்கு எதிரில் ஒவ்வொரு வண்டியும் வந்துவந்து போகிறது. தங்களுடைய வண்டியில் மகாத்மா ஏறிக்கொள்ள வேண்டு மென்ற ஆசை அந்த ஒவ்வொரு மோட்டார் சொந்தக்காரருக்கும். அன்று நிரம்பக் குளிர். அதிகமான உடை களையும் மகாத்மா தரித்துக் கொண்டிருக்க வில்லை. அவரை அதே இடத்தில் அதிக நேரம் தாமதித்து வைத்திருக்கக் கூடாதென்று எண்ணினேன். அகப்பட்ட வண்டியில் போய்விடுங்கள் என்று அவரிடம் சொன்னேன். இல்லை; உங்களுடைய வண்டிக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். ஹா! அந்த வார்த்தைகள் எனக்கு மகுடாபிஷேகம் செய்தது போலிருந்தன. அவருக்கென்று ஒன்றுமில்லை; ஆனால் எல்லாம் அவருடை யனவே என்ற யேசுநாதரின் சிஷ்யர் ஒருவருடைய வாசகம் எனக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. காந்தியடிகளுக்கென்று ஒரு மோட்டார் கிடையாது. ஆனால், அவரைச் சுற்றி எத்தனை மோட்டார்கள்!

ரகுபதி ராகவ ராஜாராம் - பதிதபாவன சீதா ராம் என்ற நாமாவளியை எல்லோர் இதயத்திலும் ஊன்றி விட்டுச் சென்றவரும், புனா கந்தர்வ மஹாவித்யாலயம் என்ற சங்கீத தாபனத்தின் தந்தையும், ஏறக்குறைய ஒவ்வொரு காங்கிர மகா சபையின் போதும், தம் சிஷ்யர்களுடன் விஜயஞ் செய்து பாரதமாதாவின் மீது இசையமுதைப் பொழிந்து, அனைவருடைய இதயத்தையும் குளிர்வித்துக் கொண்டிருந்த வருமான காலஞ்சென்ற பண்டித விஷ்ணு திகம்பரர், தமது சங்கீதப் புலமை, தெய்விகத் தன்மை யடைய வேண்டுமென்பதற்காக, சங்கீதமே அறியாத, ஆனால் சங்கீதத்தின் இங்கிதத்திலே தம்மை இழந்துவிடும் ஆற்றல் வாய்ந்த காந்தியடிகளின் தலையசைவையும், அருட்பார்வையையும் எதிர் பார்த்தாரே தவிர, வர, சுருதி, தாளபேதங்களைப் பற்றிச் சச்சர விட்டு அந்தச் சச்சரவில் சங்கீதத்தையே இழக்கும் சாமர்த்திய முடைய சங்கீத வித்துவான்களின் கரகோஷத்தை எதிர்பார்த்தா ரில்லை.

காந்தியடிகள், லண்டனில் பாரிடர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தபோது மேல்நாட்டு நடனத்தைக் கற்றுக்கொண்டார் என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தோ என்னவோ, இப் பொழுது பால் ரோபெஸன்1, என்ற நீக்ரோ நடிகர், அவர் முன்னிலை யில், தமது நடிகத் திறமையைக்காட்ட விழைகிறார்.

உலகப் பிரசித்தி பெற்ற காமா என்கிற பயில்வான், தமது தேக வலிமைக்கு அவருடைய ஆசீர்வாத முத்திரை தேவை என்று விழை கிறார். காந்தியடிகள், சிறு பையனாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, தேகப் பயிற்சி விஷயத்தில் சிறிது கூடக் கவலை செலுத்தாமலிருந்ததும், ஒரு நாள் தேகப் பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலிருந்ததற்காக இரண்டணா அபராதம் செலுத்தியதும் காமாவுக்கு ஞாபகமில்லை போலும்!

கீளார் கோவண முடுக்கும் காந்தியடிகளின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பெருமையடைய அரச குடும்பத்தினர் அநேகர் ஆவல் கொள் கிறார்கள். இங்கிலாந்திலும் இத்தாலியிலும் அரச குடும்பத்தினர் அவருக்கு அளித்த உபசாரங்களை யார் மறக்க முடியும்?

காந்தியடிகள் சிறந்த ஓர் அரசியல்வாதியென்றோ, ராஜதந்திரி யென்றோ சொல்ல முடியாது. தாம் அந்த மாதிரி அழைக்கப் பட்டால், அதை அவர் விரும்புவதுமில்லை. தம்மை ஒரு சாதாரண விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் அவர் பெருமையும் திருப்தியுமடைகிறார். ஆயினும், உலகத்தையே ஆட்டிவைக்கும் சாமர்த்தியமுள்ள அரசியல் வாதிகளும் ராஜ தந்திரிகளும் அவரைக் காணவும் பின்வாங்குகிறார்கள். பிடிவாதமுள்ள ராஜ தந்திரியான ஸ்ரீ வின்டன் சர்ச்சிலும், தந்திர அரசியல் வாதியான லார்ட் வில்லிங்டனும் அவரைக் காணக்கூட மறுத்து விட்டார்கள்!

இவைகளையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு பார்க்கிற போது, காந்தியடிகள் ஒரு புதிர் என்ற முடிவுக்குத்தான் யாரும் வரக்கூடும். இந்தப் புதிரை விடுவிக்க, அநேக அறிஞர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிற் பெரும்பாலோர் இந்தப் புதிரிலேயே சிக்கிக் கொண்டு விட்டார்கள். உண்மையிலேயே அவர் ஒரு புதிரா? இதற்கு விடை ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். அரசியல் பீடத்தில் அவரை வைத்திருத்திப் பார்க்கிறபோது, அவருடைய சொற்களிலும் செயல்களிலும் அநேக முரண்பாடுகளிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மகான் தன்மை என்னும் பரிசுத்த ஆகாயத்தில், அதாவது மேலான நிலையில், அவர் எவ்விதக் களங்கமுமில்லாத ஒரு சந்திர னாகவே பிரகாசிக்கிறார். அவர் ஒரு மகான்; வீரன்; இவையிரண் டினைக் காட்டிலும் மேலாக அவர் ஒரு மனிதன். இந்த அமிசங் களைப் பற்றிச் சிறிது விதரித்துக் கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

காந்தியடிகளை, மகாத்மா வென்று பட்டஞ் சூட்டியே நாம் போற்று கிறோம். மகாத்மாவென்றால் என்ன அர்த்தம்? இதை ரவீந்திரநாத் தாகூர் ஓரிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:

தனி மனிதனிடத்திலுள்ள நான் என்பது விடுதலை பெற்று, எல்லோரிடத்திலும் தான் ஆகப் பரிணமிக்கிற போது, மகாத்மா வாகிறது. உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளையும், யாரொருவர், தாம் ஆகப் பார்க்கிறாரோ அவர்தான் மகாத்மா.

சாதாரண விவகார பாஷையில் இதைச் சொல்லப் போனால், யாரொருவர் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்து கிறாரோ, எல்லோருடைய துன்பத்தைத் தமது துன்பமாகவும், எல்லோருடைய இன்பத்தைத் தமது இன்பமாகவும் ஏற்றுக் கொள்கிறாரோ அவரே மகாத்மா. இப்படிப் பட்டவர்களை மகான்களென்றும், மகா புருஷர்களென்றும், தீர்க்கதரிசிகளென்றும், பரம ஞானிகளென்றும், லட்சியத்திற்காக உயிரைத் துரும்பென மதிக்கும் மகா வீரர்களென்றும் பல பட அழைப்பது வழக்கம். இவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; பிறருக்காகவே வாழ்கிறார்கள். பணிசெய்து கிடப்பதுதான் இவர்கள் கடன்.

இத்தகைய மகான்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் சிறிது ஊன்றிப் பார்த்தோமானால், துன்பமும் துயரமுமே இவர் களுடைய வாழ்க்கையின் நியதிகளாயிருக்கின்றன. இவர்கள், அநேக சமயங்களில் தாங்களே வலிய, துன்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்; சில சமயங்களில் பிறரால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அந்தத் துன்பங்களை யெல்லாம் பொருட் படுத்துவதே யில்லை. அவற்றைப் பார்த்து இவர்கள் பரிகசிக்கிறார்கள்; புன் சிரிப்புச் சிரிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஹென்ரி தோரூ1 என்ற ஓர் அமெரிக்க ஞானி இருந்தான். அவன் சிறைவாசத்தை அனுபவித்தான். அப்பொழுது கூறுகிறான்:-

என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சிறைச்சாலைச் சுவர்களைக் கட்டு வதற்காகச் செலவழிக்கப்பட்ட கல்லும் சுண்ணாம்பும் வீண்தான். சிறையதிகாரிகள், என் தேகத்தை எவ்வளவு பத்திர மாகப் பூட்டி வைக் கிறார்கள்! ஆனால், என்னுடைய மனம், எவ்விதத் தங்கு தடையுமில்லாமல் அவர்களோடேயே உலவிக் கொண்டிருக்கிறதே! பாவம்! சிறு பிள்ளைகள், தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எதிர்ப்பட்டால், அவர்களை நேராக எதிர்க்கத் தைரியமில்லாமல், தங்களுடைய நாயைப்பிடித்துத் திட்டு வார்கள். அதைப் போலிருக்கிறது இந்தச் சிறையதிகாரிகள் என்னைப் பூட்டி வைத்திருப்பது!

இதைப்போல் மகான்கள் சிறையையோ சங்கிலியையோ லட்சியஞ் செய்யமாட்டார்கள். மகான்களின் புனிதத் தன்மை யானது, அதாவது தூயமனமானது, தூக்கு மரத்தில்தான் இன்பம் நுகர்கிறது என்ற வாசகப்படி, இவர்கள் உலக வாழ்க்கையிலே எவ்வளவு துன்பங்களையனுப வித்தாலும், அவைகளைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவதில்லை; சலிப்புக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, இவர்களுடைய மகான் தன்மையானது, மேற்படி துன்பங் களை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடும்படி இவர்களைத் தூண்டுகிறது. இப்படிப் போராடிப் போராடி இவர்கள் உலகத் துக்குச் சாந்தியை வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தினால் உலகம் இன்புறுகிறது.

இவர்கள் ஏன் வலிய இப்படித் துன்புறுகிறார்கள்? எல்லா ஜீவராசிகளிடத்திலும் இவர்கள் கொண்டுள்ள அன்புதான் இதற்குக் காரணம். அன்பும் துன்பமும் இணைபிரியாத இரட்டைச் சகோத ரர்கள் மாதிரி. இவையிரண்டும் மனிதனுடைய இரண்டு கண்கள் போலிருக்கின்றன என்கிறார் அறிஞர் ராதாகிருஷ்ணன். கண்க ளில்லாதவன் மனிதனாக மாட்டான். அதைப்போல் அன்பு செலுத் தாதவர்களும் துன்ப மனுபவியாதவர் களும் மனிதர்களாகமாட் டார்கள். துன்பத்திற்குப் பயந்து அன்பு செலுத்த மறுக்கிறவன் மனிதனல்ல; அவன் ஒரு ஜடவது; எதற்கும் உதவாத ஒரு பிண்டம். தாந்தே என்ற இத்தாலிய மகா கவிஞன் கூறிய மாதிரி உலகத்தி னிடம் அன்பு செலுத்துகிற மகான்கள் எந்த யுகத்தில் அவதரித்த போதிலும் அவர்கள் மகத்தான துயர மென்னும் மகுடத்தையே அணிந்து கொண்டிருக் கிறார்கள் எவனொருவன் உண்மையாகவே அன்பு செலுத்துகிறானோ அவன் துன்பமனுபவிப்பதினின்று தப்ப முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு ஒருவன் மற்றவர்கள்மீது அதிக மாக அன்பு செலுத்துகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவன் துன்பத்தை அனுபவிக்கிறான். ஒரு தாய், தன் குழந்தையின் இன்பத்திற்காக எத்தனையோ விதமான துன்பங்களை அனுபவிக்கி றாள். அப்படி அனுபவிப்பதிலே ஒரு திருப்தி கொள்கிறாள். அந்தத் திருப்தியே அவள் அடைகிற இன்பம். அதைப் போலவே, மகான் களுடைய அன்பும் இருக்கிறது. தாய், தன் குழந்தை யினிடத்தில் அன்பு செலுத்தாமல் எப்படி இருக்க முடியாதோ, அப்படியே மகான் தன்மையுடையவர்களும், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத் தாமலிருக்க முடியாது. தாய் எப்படி, அந்த அன்பின் மூலமாகத் துன்பத்தை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறாளோ அப்படியே மகான்களும் துன்பத்தை வலிய ஏற்றுக் கொள்கிறார்கள்.

இங்ஙனம் இவர்கள் அன்பையும் துன்பத்தையும் ஒரு கண் கொண்டு பார்ப்பதினால்தான் இவர்களுடைய செயல்களில் அநேக முரண்பாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இவர்கள், தங்களைப் பொறுத்தமட்டில் அன்பெனும் உயர்ந்த சிகரத்தில் இருக்கிறார்கள். ஆனால், கீழே அதாவது உலகத்திலே, அறியாமை, வறுமை முதலிய துன்பங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார்கள். இவர்கள் இதயம் துடி துடிக்கிறது. பரம கருணை யினால், தங்கள் உச்சநிலையிலிருந்து கீழே இறங்கு கிறார்கள். மேலான உண்மைகளை உபதேசிக்கிறார்கள். அவைகளை அறிந்து கொள்ளக் கூடிய தகுதி ஜனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா வென்பதை இவர்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்க ளுடைய துன்ப நிலையை இன்ப நிலையாகக் கருதிக் கொண்டிருக்கி றார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சிறந்த உண்மைகளை உபதேசிக் கிறபோது, அவை அவர்களுக்கு முரண்பாடாகவே தெரிகின்றன. இரண்டு கடல் நீர்கள் ஒன்று சேர்கிறபோது, இரண்டுக்கும் வேறுபாடு நன்றாகத் தெரிகிறதுபோல், மேலான தன்மையும் கீழான தன்மையும் ஒன்று சேர்கிறபோது, சில மாறுபாடுகள் இருக்கவே செய்யும். அடிப்படையில் ஒன்றுதான். எல்லாம் நீர்தான். நீரின் நிறத்தில், கனத்தில், கலப்பில், வித்தியாசங்கள் இருக்கக் கூடும்.

ஆனால், இப்படிப்பட்ட முரண்பாடுடையவர்களாலேயே உலகத்திற்கு நன்மை செய்ய முடியும். இவர்கள் தான் உலகத்திற்கு நன்மை செய்திருக் கிறார்கள். பிரபஞ்ச இதிகாசம், இந்த உண்மையை நமக்குச் சதா அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகத்திலே தோன்றின எந்தப் புரட்சியை வேண்டு மானாலும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள். தங்களுடைய சுற்றுச் சார்பைக் கண்டு அதிருப்தி கொண்டவர்கள்தான், புரட்சிகளுக்கெல்லாம் காரணர் களாயிருக்கிறார்கள். இவர்களுடைய சமகாலத்தவர் இவர்களைக் கிளர்ச்சிக்காரரென்றும், கலகக்காரரென்றும், புரட்சிக்கார ரென்றும் சொல்லி, இவர்களைப் பலவிதமாக இம்சிக்கிறார்கள். ஆயினும் இவர்கள், புதிய கொள்கை களை, புதிய இயக்கங்களை விதைத்து விட்டு மறைந்து விடுகிறார்கள். வருங்கால சந்ததியார், இந்த விதையிலிருந்து கிடைத்த மகசூலை அனுபவிக்கிறார்கள். அப்பொழுதுதான் இவர்களுடைய பெருமை தெரிகிறது. மகான்க ளென்று இவர்கள் போற்றப்படுகிறார்கள். புத்தர்பிரான், தமது காலத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு களையும் எதிர்த்துப் போராடினார். பலபேருடைய பரிகாசத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். யேசுநாதர், தம்மைச் சுற்றியிருந்த ரோம ஏகாதிபத்தியத்தின் போலித் தனத்தையும் ஆடம்பரத்தையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். ஆனால், ஜனங்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள்; சிலுவையிலே அறைந்தார்கள். ஸாக்ரடீ என்ன, மார்ட்டின் லூதர் என்ன, பிரெஞ்சுப் புரட்சிக்கு விதை யூன்றின ரூஸோ என்ன, கார்ல் மார்க் என்ன, லெனின் என்ன, இப்படிப்பட்டவர்கள் புரட்சிக்காரர்களென்று முத்திரையிடப் பெற்று அநேக அவதிகளுக் குட்படுத்தப் பட்டார்கள். ஆனால், இவர் களெல்லோரும் மகான்கள்.

இவர்கள் வெளிப்பார்வைக்கு அநாகரிகர்கள் போலவும் பித்தர்கள் போலவும் நடந்து கொள்ளலாம். ஆனால், உலகத்தை நாகரிகப்படுத்தவும், உலகத்தின் பித்தத்தைத் தெளிவிக்கவுமே இவர்கள் பாடுபடுகிறார்கள். நாம் இப்பொழுது நம்மை நாக ரிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் நாம் நாகரிகத்தை யடைந்திருக்கிறோமா? நாகரிக வாழ்க்கையின் அடிப்படை யென்ன வென்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்குப் பதில் சொல்லு முகத்தான் ஓர் அறிஞன் கூறுகிறான்:-

ஒரு சமுதாயத்தில், வலியார், எளியாருடைய சுமையை எவ்வளவுக் கெவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு அந்தச் சமுதாயத்தின் வாழ்க்கையானது நாகரிகமடைகிறது.

இந்த அளவு கொண்டுதான் மகான்கள் உலகத்தைப் பார்க்கி றார்கள். உள்ள நிலையைக்கண்டு இரங்குகிறார்கள்; அதிருப்தி கொள்கிறார்கள். விளைவது என்ன? புரட்சி; இவர்களுக்குச் சிறைவாசம், அல்லது தூக்கு மேடை.

ஆயிரம் பேரில் ஒருவர்தான் நன்றாகப் பேசமுடியும். நன்றாக பேச முடிந்த ஆயிரம் பேரில் ஒருவர்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும். தெளிவாகச் சிந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவர்தான், வாழ்க்கையில் தங்களுடைய லட்சியம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தெரிந்து கொண்டு விட்டால் மட்டும் போதுமா? அதனை அடைய வேண்டாமா? தெரிந்து கொண்ட ஆயிரம் பேரிலே ஒருவர்தான், தங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமென்ற ஆவல் கொண்டு, அதனை நோக்கிப் பிரயாணஞ் செய்யமுடியும். அப்படிச் செல்வோரில் எத்தனையோ பேர், வழியில் களைப்பினால் பின்தங்கிவிடலாம்; வேறுசிலர் வேறு ஆசைகளினால் தூண்டப் பட்டு வேறு பாதைகளுக்குச் சென்றுவிடலாம்; இன்னுஞ் சிலர் லட்சியப் பிரகாசத்தினால் கண் கூசிக் குருடர்களாய் மேல் நோக்கிச் செல்லாமலேயே பின் தங்கிவிடலாம். இங்ஙனம் லட்சியப் பாதை யானது மகா கடினமான பாதையா யிருந்தபோதிலும், யாரொருவர் அந்தப் பாதையில் அடி எடுத்து வைக்கிறார்களோ, அடியெடுத்து வைக்கக் கூடிய ஆற்றலையும் துணிச்சலையும் பெறுகிறார்களோ, அவர்களெல்லோரையுமே பொதுப்படையாக மகான்களென்று உலகம் அழைக்கிறது.

மகான் தன்மைக்குரிய இந்த மாதிரியான லட்சணங்களைக் கொண்டு காந்தியடிகளை நாம் நோக்கிறபோது, அவர் ஒரு மகானென்பது நன்கு தெரியும். சிலருடைய வாழ்க்கையில், இளமையிலேயே இந்த மகான் தன்மை விகாசமடைகிறது. இன்னுஞ் சிலரிடத்தில், வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே விகாச மடைகிறது. எப்படி, எப்பொழுது விகாசமடைந்தாலும், சிறு பிராயத்திலேயே இதற்கு முளை தோன்றி விடுகிறது. ஆனால், இந்த முளையை ஒரு சிலரால்தான் அறிய முடிகிறது; பெரும்பாலோரால் அறிய முடிவ தில்லை. காந்தியடிகளின் சுய சரித்திரத்தை ஊன்றிப் படிப்போர்க்கு இந்த உண்மை புலனாகும். காந்தியடிகள் ஒரு மகானென்பதை இந்திய மகாஜனங்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்த தெல்லாம், அவர் இந்தியாவில் ரெளலெட் சத்தியாக்கிரகம் தொடங்கி நடத்திய பிறகுதான். ரவீந்திர நாத் தாகூர் 1921ஆம் வருஷம் சபர்மதி ஆசிரமத் திற்கு விஜயம் செய்திருந்த போது, காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டஞ் சூட்டினார். அது முதற் கொண்டே அந்தப் பெயர் உலகத் தில் முழங்கிக் கொண்டு வருகிறது. ஆனால், இந்த மகாத்மா தன்மை, காந்தியடிகளிடத்தில் இருப்பதை அவருடைய அரசியல் குரு வான கோபால கிருஷ்ண கோகலே, 1912-ஆம் வருஷத்திலேயே தெரிந்துகொண்டு விட்டார். அவர் கூறுகிறார்:-

வீரர்களும் மகான்களும் எந்தத் தன்மைகளைக் கொண்டு தயாரிக்கப் படுகிறார்களோ அந்தத் தன்மைகளெல்லாம் காந்தி யடிகளிடத்தில் இருக்கின்றன. இதில் சந்தேகமில்லை. இது தவிர, தம்மைச் சுற்றியுள்ள சாதாரண மனிதர்களை வீரர்களாகவும் மகான்களாகவும் ஆக்கிவிடக் கூடிய அபாரமான ஆத்ம சக்தியும் அவரிடத்தில் இருக்கிறது.

இந்த மகான் தன்மை அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரை ஏன் ஜனங்கள் மகாத்மா வென்று போற்றுகிறார்கள்? அவரைக் காட்டிலும் அறிவு, அனுபவம், வயது முதலியவைகளில் சிறந்த வர்கள் பலரிருக்க, அவருக்கு மட்டும் ஏன் இந்தத் தனி மதிப்பு? இதைச் சிறிது விளக்குவோம். அல்டோ ஹக்லி1 என்ற நமது சமகாலத்து மேனாட்டு அறிஞன் ஓரிடத்தில் கூறுகிறான்:-

அரசியல் பரம்பரை இருக்கிறதே அது மகா அயோக்கியத்தனமான பரம்பரை. உலகத்தில் இரண்டுவிதமான தர்மங்கள் இப்பொழுது அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. தனிப்பட்ட நபர்களுக்கென்று ஒரு தர்மம்; ஜாதிக்கென்று அதாவது தேசத்திற்கென்று வேறு தர்மம். ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் யோக்கியனாகவும், கருணை நிறைந்தவனாகவும், மற்றவர் களுடைய குறை நிறைகளைப் பாராட்டுகிறவனாகவும் இருக்கிறான். ஆனால், அதே மனிதன், ஒரு ஜாதியின் பிரதிநிதியாகவோ, அல்லது ஏதோ ஒரு கட்சியின் பிரதிநிதியாகவோ வருகிறபோது, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தக் காரியங்களைச் செய்தால் இழிவு என்று கருது கிறானோ அதே காரியங்களைக் கூச்சமின்றிச் செய்கிறான். அப்படிச் செய்வது தான் நியாயமென்றும் சாதிக்கிறான்.

இதனால் என்ன ஏற்படுகிற தென்றால், ஒரு ஜாதிக்கு, சக்தியும் புகழும் இருக்கிறதென்றும், ஆனால் அதற்கு ஒழுக்கம் அல்லது தர்மம் என்பதே கிடையாதென்றும் நாம் கருதிக் கொள்வதாக ஏற்படுகிறதல்லவா? ஜாதி என்ற முறையில் நாம் கேவலமாக நடந்து கொள்வது சரியென்று நம்புகிறோம்.

காந்தியடிகள், அரசியலை ஒரு பாரமார்த்திக நிலைக்கு உயர்த்தி யிருக்கிறார் என்று சொல்வதின் தாத்பரியமெல்லாம் இதுதான். அதாவது, நாம் நமது சொந்த விவகாரங்களில் எந்த நியாயத்தை, எந்த தர்மத்தை அனுசரித்து நடக்கிறோமோ அதே நியாயத்துடனும் தர்மத்துடனும் பொது விவகாரங்களிலும் நடந்துகொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் நம் சகோதரர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எப்படி கண்ணியமாகவும் பொறுப்பறிந்தும் நடந்து, அதன் மூலமாக அவர்களுடைய அபிமானத்தையும் நன் மதிப்பையும் பெறவேண்டுமென்று ஆவல் கொள்கிறோமோ அதைப்போல், தேசீய விவகாரங்களிலும் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் வேறே, தேசம் வேறே என்று பிரிக்கக் கூடாது. தேசீய வாழ்க்கையில் நமது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிக்கின்றி நமக்கென்று ஒரு வாழ்க்கை யும் தேசத்திற்கென்று ஒரு வாழ்க்கையுமாக, வாழ்க்கையை இரண்டு கூறுபடுத்திக்கொண்டு நடப்போமானால் நாமும் அபிவிருத்தி யடைவதில்லை; தேசமும் பாழடைகிறது.

நம்முடைய அரசியல் தலைவர்களிற் பெரும்பாலோர், வாழ்க்கையை, இங்ஙனம் இரண்டு கூறுபடுத்தியே பார்க்கிறார்கள். பொதுஜன அபிப்பிராயம், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை யென்று சொன்னால், அஃது அதனுடைய குற்றமா? ஆனால், காந்தி யடிகள், தமது வாழ்க்கையை ஒரு மொத்தத் தொகுப்பாகவே பார்க் கிறார். நாம் வேறே, தேசம் வேறே என்று பார்ப்பதில்லை. தேசத்தின் க்ஷேமத்திலே தான் தம்முடைய க்ஷேமம் இருக்கிற தென்பதை அவர் பல முறை தம் செயல்களால் நிரூபித்துக் காட்டியிருக் கிறார். தேசத் திற்காக அவர் இருக்கிறாரே தவிர, அவருக்காக தேசம் இல்லை. இந்த மாதிரியான விரிந்த மனப்பான்மையை, எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் நாம் காண்கிறோமா? இல்லையே. இந்தியா விலே மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா அரசியல் வாதிகளிடத் திலும் இந்த இரண்டுவித வாழ்க்கைத் தோற்றங்கள்தான் காணப்படு கின்றன. போரும் பகைமையும் உலகத்திலே இது போழ்து மலிந்திருப்பதற்கெல்லாம் காரணம், அரசியல் வாதிகள் இங்ஙனம் இரண்டுபட்ட வாழ்க்கையை நடத்துவதுதான். மகாத்மா காந்தியி னிடத்தில் இந்த இரண்டுபட்ட தன்மை இல்லாததினாலேயே அவர் உலகத்தினரால் போற்றப்படுகிறார்.

தூலமாகப் பார்க்கிறபோது, இன்றைய மனிதன் வாழ்க்கை யின் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறான். அவனுடைய அறிவு, திறமையின் கோபுரத்தின் மீது கொலுவிருக்கிறது. நமக்கு விவசாய நிலங்களும், போக்குவரவு சாதனங்களும் அதிகப்பட்டிருக் கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் ரேடியோ இருக்கிறது. பிரதி யொருவனும் சொந்தமாக ஓர் ஆகாயவிமானத்தை வைத்துக் கொண்டிருக்கக் கூடிய காலம் விரைவிலே வரக்கூடும். உலகத்தில் வியாதியே இல்லாதபடி செய்யப்பட்டு விடலாம். தொழிலாளர் களுக்கு வயோதிகச் சம்பளம் கொடுத்து அவர்களைக் கவலைக் கடலினின்று கரையேற்றிவிடலாம். இவையெல்லாம் நடைபெற்று விட்டாலும், மனிதன் சாந்திபெறக் கூடுமா? அவன், தன் வாழ்க்கை யில் ஆறுதல் காண்பானா? மாட்டான். வாழ்க்கை யென்பது என்ன? வயிறு நிறைய ஆகாரம் உண்பதா? அல்லது அறிவுக் கடலில் மட்டும் மிதந்து கொண்டிருப்பதா? இல்லை; இல்லை. எவனொரு வன் தன் அந்தரங்கத்தில் இன்பத்தை யடைகிறானோ, அதாவது இதய சாந்தி பெறுகிறானோ அவன்தான் வாழ்க்கையை நடத்து கிறவன். இந்தத் தூய வாழ்க்கையைப் பொதுவாக உலக மக்களுக்கு, சிறப்பாக இந்திய மகா ஜனங்களுக்கு அளிக்கவேண்டுமென்பது தான் காந்தியடிகளின் ஆவல். இதற்காகவே அவரை எல்லோரும் போற்றுகிறார்கள். எல்லாத் தலைவர்களிடத்திலும் இந்த ஆவல் இருக்கிறதா? இல்லையே.

அரசியல் தலைவர்களிற் பெரும்பாலோர், மனிதனுடைய புறத் தேவைகளை மட்டும் கவனித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் காந்தியடிகள், மனிதனுடைய அகத் தேவை யொன்று இருக்கிற தென்பதை உணர்ந்து அதனைப் பூர்த்தி செய்ய விழை கிறார். இதற்காக அவர், புறத்தேவைகளைப் புறக்கணிக்கவில்லை. ஒரு செடியானது செழிப்பாக வளர வேண்டுமானால் அதற்கு எப்படி நல்ல உரம் போட்டு, ஒழுங்காக நீர் பாய்ச்சிக் கொண்டு வர வேண்டுமோ, அதைப் போல், மனிதனுடைய அக வளர்ச்சியானது, அவனுடைய புற வளர்ச்சியை ஒட்டியிருக்கிறது. ஏதோ ஏகதேசமாக ஒரு சில மகான்கள்தான், புறத்தைப் பொருட்படுத்தாமல் அக வாழ்க்கையில் முன்னேற்ற மடைந்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய புறத்தேவை களைப் பூர்த்தி செய்து கொடுத்தால் தான், அவர்களுடைய அக வளர்ச்சிக்கு நாம் வழி காட்ட முடியும். காந்தியடிகளின் உறுதியான நம்பிக்கை இதுதான். மனிதனுடைய வயிற்றுப் பசியைத் தீர்ப்பதைக் காட்டிலும் அவனுடைய ஆத்மப் பசியைத் தீர்ப்பதுதான் சிரேஷ்ட மென்று ஒரு சமயம் ரவீந்திர நாத் தாகூர் கூறியதற்குக் காந்தியடிகள் என்ன விடையளிக்கிறார் பாருங்கள்!

கவிஞர் தமது கவிதா உணர்ச்சிக்குப் பொருத்தமாக எதிர்காலத்தின் பொருட்டு வாழ்கிறார். நம்மையும் அந்த மாதிரி வாழுமாறு சொல்கிறார். காலை நேரத்திலே, பட்சிகள் ஆகாயத்தில் குதூகல மாகப் பறப்பதை அவர் நமக்கு வருணித்துக் காட்டுகிறார். வாத வம். இந்தப் பட்சிகளுக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்து விட்டது. முந்திய நாள் இரவு ஓய்வு கொண்டதினிமித்தம் அவை களின் தேகத்தில் நல்ல ரத்தம் ஓடிக் கொண்டிருக்க, ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கின்றன. ஆனால் நான் காண்கிற பட்சிகள் சிறகுகளை அசைக்கக்கூட முடியாத பலவீனத்தோடிருக் கின்றன. என் ஆசை வார்த்தைகள், அந்தச் சிறகுகளுக்குப் பலத்தை அளிக்க வில்லை. இந்திய ஆகாயத்தின் கீழ் வாழும் மனிதப் பறவை யானது, முன்னாளிரவு எவ்வளவு பலவீனத்துடன் படுக்கச் சென் றதோ அதைவிட அதிக பலவீனமாக மறுநாள் காலையில் எழுந் திருக்கிறது. லட்சக் கணக்கான இந்திய மக்களுக்கு, எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்கவேண்டியிருக்கிறது; அல்லது மெய் மறந்த நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இந்த நிலையை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். நோய்வாய்ப்பட்டுக் கதறும் நோயாளிகளை ஒரு பாட்டுப்பாடி என்னால் குணப்படுத்த முடிய வில்லை. பசி நோயால் அவதியுறும் லட்சக் கணக்கான இந்திய மக்கள் ஒரே ஒரு பாட்டைத்தான் கேட்கிறார்கள். அஃதென்ன? பலத்தை அளிக்கக் கூடிய ஒரு கவளச் சோறு.

பொதுவாக உலகத்திலுள்ள ஏழை மக்களும், சிறப்பாக இந்திய மக்களும் காந்தியடிகளை ஒரு தெய்வமாகக் கொண்டாடு வதின் ரகசியம் இதுதான். அவர், ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு மட்டும் இருக்கவில்லை; உணர்ந்து, அந்த உணர்ச்சியைச் செயல் மூலமாக வெளிப்படுத்துகிறார். மற்றத் தலைவர்கள், ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்து கொண் டிருப்பதோடு மட்டும் திருப்தியடைகிறார்கள்.

சாத்வீக எதிர்ப்பு முறையை முதன் முதலாகக் கையாண்டவர் காந்தியடிகளேயென்றும், இந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் அவரே யென்றும், இதற்காகவே உலகம் அவரைப் போற்றுகிற தென்றும் சிலர் சொல்லுகிறார்கள். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. இதற்காக, காந்தியடிகளை உலகம் போற்றுகிறதென்று சொன்னால், அது மலிவான போற்றுதல் என்றுதான் நாம் கொள்கிறோம். அதாவது அவருடைய உயர்நிலைக்கு இது தக்க மதிப்பல்ல. இதைச் சிறிது விதரித்துக் கூற விரும்புகிறோம்.

சாத்வீக எதிர்ப்பு அல்லது ஒத்துழையாமை யென்பது, காந்தியடி களால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப் பட்டதுமல்ல; இந்தியாவின் சரித்திரத்திற்குப் புறம்பானதுமல்ல; புதிதுமல்ல; தீங்கிழைத்த வருடைய வாசற்படியில் உட்கார்ந்து, அந்தத் தீங்குக்குப் பரிகாரம் தேடிக்கொடா விட்டால் இறந்து போவதென்று நிச்சயப் படுத்திக் கொள்வது, மரணம் வரையில் பட்டினி கிடப்பது, சட்டங் களை மறுப்பது, தேசத்தினின்று வெளியேறுவது, அரசனைத் திரகாரஞ் செய்வது, அரசனைப் பகிரங்கமாகக் கண்டிப்பது முதலியவைகளெல்லாம் அஹிம்ஸா தர்ம முறையில் அனுஷ்டிக்கப் படக்கூடிய ஆயுதங்களென்று நம் புராதன நூல்களில் கூறப்படு கின்றன என்ற பாபு பகவான் தாஸின் வாசகம் இங்குக் கவனிக்கத் தக்கது.

ஜடப் பொருளின் ஆராய்ச்சியில் அதிகமான நம்பிக்கை வைத்து, அதிலேயே வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறதென்று முடிவுகட்டுகிற மேனாட்டார் கூட இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாண்டிருக் கிறார்கள். சென்ற சில நூற்றாண்டுகளில் மேனாட்டிலும் இந்தியாவிலும் எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறை அனுஷ்டிக்கப் பட்டிருக்கிறதென்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறோம்.

1.  ஆதிரிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த ஹங்கேரியின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவன் கோஸுத் என்ற அறிஞன் என்றுதான் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரியும். ஆனால், இவனால் ஹங்கேரிக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் படவில்லை. உண்மையில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவன் பிரெங்க் டீக்1 என்பவன். இவன் ஆதிரிய ஏகாதிபத்தியத் திற்கு விரோதமாகச் சாத்வீக முறையில் ஒத்துழையா இயக்கத்தை நடத்தி 1867ஆம் வருஷம் வெற்றி பெற்றான். இவனால்தான், ஹங்கேரி யின் தனி அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.

2.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் ஜெர்மனி யில், பிமார்க் கொண்டு வந்த சில திட்டங்களை எதிர்த்து, முக்கியமாக இரண்டு ஒத்துழையா இயக்கங்கள் நடைபெற்றன. ஓர் இயக்கம், கத்தோலிக்க கிறிதுவர்களால் நடத்தப் பெற்றது. மற்றொன்று, தொழிலாளர்களால் நடத்தப்பெற்றது. இவை யிரண்டும் வெற்றி பெற்றன.

3.  ருஷ்ய ஆதிக்கத்தின் கீழிருந்த பின்லாந்து வாசிகள், தங்களுடைய துன்பங்கள் சிலவற்றிற்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு 1901ஆம் வருஷத்திலிருந்து 1905ஆம் வருஷம் வரை சாத்வீக ஒத்துழையா இயக்கத்தை நடத்தி வெற்றிபெற்றார்கள்.

4.  இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகத்தில், புகையிலை உரிமையை எதிர்த்து பர்ஷியர்களும், பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை எதிர்த்து எகிப்தியர்களும், அந்நியர்களுடைய பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்துச் சீனர்களும் சாத்வீக முறையில் போராடியது அனைவருக்கும் நினைவிருக்குமல்லவா?

5.  1812ஆம் வருஷம், பாரத நாட்டின் புண்ணிய க்ஷேத்திரமாகிய காசியில், அரசாங்கத்தார் சில புதிய வரிகளை விதித்தனர். இதனை ஜனங்கள் சாத்வீக முறையில் எதிர்த்தார்கள். எல்லா கடைகளும் மூடப்பட்டன. ஜனங்கள் எவ்வித வேலையிலும் ஈடுபடவில்லை. தலைவர்கள் சொற்படி ஜனங்கள் நடந்தனர். இயக்கம் வெற்றி பெற்றது. அரசாங்கத்தார் வரியை ரத்து செய்தனர்.

6.  1830ஆம் வருஷம் மைசூர் சமதானத்தில் சில அட்டூழியங்கள் நடை பெற்றன. இவைகளை அஹிம்சா முறையில் எதிர்த்து ஜனங்கள் போராடினார்கள். ஜனங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். நிலங்களில் யாரும் வேலை செய்ய வில்லை. வரி செலுத்த மறுத்து விட்டார்கள். கடைசியில் அரசாங்கம் பணிந்தது.

7.  வங்காளப் பிரிவினையை எதிர்த்து 1907ஆம் வருஷம் இந்தியா வெங்கணும் சாத்வீக முறையில் நடைபெற்ற இயக்கத்தை யாருமே அறிவர்.

இங்ஙனம் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்கள், பல நாடுகளில் பல காலங் களில் பலவாக நடைபெற்றிருக்கின்றன. ஆதலின் காந்தி யடிகள்தான் இந்த இயக்கத்தின் சிருஷ்டிகர்த்தர் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த இயக்கத்தைப் பொறுத்தமட்டில் காந்தி யடிகளின் முக்கியத்துவம் எதிலிருக்கிறதென்றால், விதீரணமான ஒரு தேசம் பூராவுக்குமாக இந்த இயக்கத்தைப் பிரயோகம் செய்து பரீட்சை பார்த்ததில்தான். குறிப்பிட்ட ஒரு பிரிவார், குறிப்பிட்ட ஒரு குறைக்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு இந்த முறை இதுகாறும் எங்கும் கையாளப்பட்டதே தவிர, தேசப் பொதுவில் இதனை யாரும் கையாளவில்லை. இதில் காந்தியடிகள் தான் முதன்மையானவர். அவர், இந்தப் பரீட்சையில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார், இதனால் அந்நிய ஆதிக்கத்தின் பிடிப்பு எவ்வளவு தூரம் தளர்ந்திருக்கிறது. ஆயுத பலத்தையும், மனோ பலத்தையும், ஜாதீய உணர்ச்சியையும் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு ஜாதியாரை அஹிம்சைப் பரீட்சைக்குட்படுத்துவது சரியா, ஆத்மீக சோதனையை அரசியல் களத்திலே கொண்டுவந்து நடத்தலாமா என்பன போன்ற பிரச்னைகளில் கருத்து வேற்றுமை களிலிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், வெற்றியோ தோல்வியோ, பலனோ, நிஷ்பலனோ, ஒன்றையுமே பொருட் படுத்தாமல் இந்தப் பரிசோதனையில் இறங்கிய துணிச்சல் இருக்கிறதே அது யாருக்கும் உண்டாகாது; இது வரை யாருக்கும் உண்டாகவுமில்லை. இஃது அசாதாரணமான துணிச்சல் மட்டு மல்ல; அமானுஷ்யத்தன்மையுள்ள துணிச்சலுங்கூட. கடமையைச் செய்ய வேண்டுமென்ற ஆவலினால் ஏற்பட்ட துணிச்சல் இது. இந்தத் துணிச்சலின் மற்றொரு பக்கந்தான் மகான் தன்மை. இந்தத் துணிச்சலுக்கும் மகான் தன்மைக்கும்தான் காந்தியடிகள் போற்றப் படுகிறாரே தவிர, அவர் அடைந்த வெற்றி தோல்விகளுக்காக வல்ல.

சாத்வீக எதிர்ப்பு, ஒத்துழையாமை என்று பல பெயரிட்டு அழைக்கப் படுகிற இந்த அஹிம்ஸை இயக்கம், லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமே தவிர. இதுவே லட்சியமல்ல. ஒழுங்கும் தன்னலத் தியாகமு மில்லாமல் எந்த ஒரு ஜாதியும் உண்மையான முன்னேற்றத்தையடைய முடியாததால், இந்த ஒழுங்கும் தன்னலத் தியாக உணர்ச்சியும் இந்திய தேச மக்களிடையே ஏற்பட வேண்டுமென்பதற்காகவே ஒத்துழையா இயக்கம் தொடங்கப் பட்டிருக்கிறதென்று 1920ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் லாலா லஜபதிராயின் தலைமையில் கூடிய விசேஷ காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ஒத்துழையாத் தீர்மானம் கூறுவதை இங்கு நேயர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். பாரத ஜாதியானது எல்லாவகையிலும் சுபிட்சமாயிருக்க வேண்டு மென்ற உன்னத லட்சியத்தை அடைவதற்கு இந்த ஒத்துழையா இயக்கம் சரியான சாதனமா வென்பதைப்பற்றி, மேலே நாம் கூறிய வாறு அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சாதனத்தைக் கையாண்டதினால் இந்திய தேசீய வாழ்வைப் பொறுத்தமட்டில் சில நன்மைகள் உண்டாயிருக் கின்றன வென்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நன்மைகள் காலவேகத்தை யொட்டி யனவாயில்லாமலிருக்கலாம்; நாம் அடைய வேண்டிய லட்சியத்தை உத்தேசிக்கையில், மிகச் சொற்பமாயிருக்கலாம். அதுவேறு விஷயம். ஆனால், நன்மைகள் உண்டாயிருக்கின்றன வென்பதை நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவை யாவை?

1.  ஒத்துழையா இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து, அதாவது காந்தியடிகள் காங்கிரசின் மேலாதிக்கம் பெற்ற காலத்திலிருந்து, அரசியலில் எல்லா ஜனங்களுக்கும் ஒரு சிரத்தை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் அறிந்தார்க்கு மட்டும் அடைக்கலம் அளித்துவந்த இந்த அரசியலில் நமக்கும் உரிமையுண்டு, இதனை யறிவது நமது கடமையென்று, பாமர ஜனங்களென அர்த்தமில்லாமல் அழைக் கப்படுகிற சாதாரண ஜனங்கள் கருதலானார்கள்.

2.  இப்படி இவர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட பகிரங்கமான பலன் என்ன வென்றால், பொதுக்கூட்டங்களில் ஆங்கில பாஷையில் பேசி, ஜனங்களின் கரகோஷத்தையும் அதிகாரிகளின் கைகுலுக்குதலையும் பெறுவதுதான் சிலாக்கிய மென்றிருந்த போலி கௌரவம் போய் விட்டது. அவரவர்களுடைய தாய் மொழியில் பேசுவது நல்லதென்றும், தாய்மொழியின் மூல மாகவே ஒரு தேசத்தின் தன்மதிப்பு வளருமென்றும் ஆங்கிலமறிந்த அரசியல்வாதிகள் எண்ணி அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தார்கள். பொதுவாக தேச பாஷைகளுக்கு ஒரு கௌரவம் ஏற்பட்டது.

3.  இந்தியாவிலே யுள்ளவரனைவரும் ஒரே ஜாதியினர் என்ற உணர்ச்சி லேசாக ரேகை விட ஆரம்பித்தது.

4.  ஆடம்பர வாழ்விலிருந்த மோகம் போய், எளிய வாழ்வு என்று சொல்லப்படுகிற இயற்கை வாழ்விலே ஒரு பற்றுதல் உண்டா யிற்று.

5.  அன்றாட வாழ்க்கையின் தேவைகளை அந்நியப் பொருட் களைக் கொண்டு பூர்த்தி செய்வதென்ற பழக்கம் குறைந்தது. சுய தேசத்தில் உண்டாகிற பொருள்களை உபயோகிக்க வேண்டு மென்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் சுதேசத் தொழில் முயற்சிகள் பல தொடங்கப் பட்டன.

6.  தமக்கென்று ஒரு நாகரிக பரம்பரை உண்டு என்பதை, அடிமைத் தனத்தின் காரணமாக அடியோடு மறந்திருந்த இந்தியர்கள், அப்பொழுதிருந்து அந்தப் பரம்பரையைப் பற்றிச் சிறிது சிந்திக்கப் தலைப்பட்டார்கள்.

7.  ஆளப்படும் நாட்டைப்பற்றி அது காறும் அசட்டை மனப் பான்மை கொண்டிருந்த ஆளும் சாதியினர், இப்பொழுது அதன் அரசியல் துடிப்புக்களை அறிந்த கொள்ள ஆவல் கொண்டார்கள்.

8.  இந்திய மகாஜனங்களிடத்தில் குடி கொண்டிருந்த அச்சம் விலகத் தலைபட்டது. அதன் தானத்தில் அஞ்சாமை குடிகொள்ள ஆரம்பித்தது.

இவற்றில் சிரேஷ்டமானவை இரண்டு. ஒன்று, பாரத ஜாதிக்கு அதன் நாகரிக பரம்பரையை உணர்த்தியது; மற்றொன்று, இந்திய மகாஜனங் களுக்கு அளித்த அஞ்சாமை யென்னும் ஆயுதம். காந்தியடிகளின் மகத்தான இந்த இரண்டு நன்கொடைகளுக்காக வுமே அவரை நாம் என்றும் நன்றியுடன் போற்றவேண்டும்.

எப்படி அன்பும் துன்பமும் இணைபிரியாச் சகோதரர்களோ அதைப் போல் அடிமைத்தனமும் கோழைத்தனமும் இணைபிரியா சகோதரர்கள். எதனால் எது ஏற்பட்டது, அதாவது அடிமைத்தனத் தினால் கோழைத்தனம் ஏற்பட்டதா, அல்லது கோழைத்தனத்தி னால் அடிமைத்தனம் ஏற்பட்டதா வென்பதை நாம் பாகுபடுத்திக் கூறமுடியாது. ஒன்றொழிந்தால் மற்றொன் றொழியும்; ஒன்றிருந் தால் மற்றொன்றிருக்கும். அவ்வளவு தான் நமக்கும் தெரியும். இவ்விரண்டும் ஒரு ஜாதியை, பனிபோல் மூடிக் கொண்டு விட்டால், அந்த ஜாதி இருக்கிற இடமே தெரிவதில்லை. அஃது இருந்தும் இல்லாமலேயே இருக்கிறது. இதனாலேயே நமது பெரியோர்கள் அஞ்சாமையைப்பற்றி அதிகமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள்.

அஞ்சாமை யல்லாற் றுணை வேண்டா
வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் பெயின்

என்ற வள்ளுவர் வாக்கு முதல் அச்சமில்லை; அச்சமில்லை யென்ற பாரதியாரின் வாசகம் வரையில், எந்த மகா புருஷர்களுடைய திருவாக்கு களைப் பரிசீலனை செய்து பார்த்தோமானாலும் அவற்றிற்கு அடிப்படையில் அஞ்சாமையென்ற ரேகை ஒளிவிட்டுக் கொண்டிருக் கிறதைக் காண் கிறோம். அஞ்சாமை என்கிற ஆயுதத்தைத் தரித்துக் கொண்டிருந்ததினால் தான், திருநாவுக்கரசர், நாமார்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்; நரகத்திலிடர்ப் படோம்; நடலையில்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணி வோமல்லோம்; இன்பமே என்னாளுந் துன்பமில்லை என்று வீறு கொண்டு பேசினார். அஞ்சாமையுடையவர்கள்தான் மனிதத் தன்மை யில் சுலபமாக வளர்ச்சி பெறக்கூடும். இந்தியர்கள், மனிதர்களாக மதிக்கப்படுவ தில்லை யென்று சொன்னால், அதற்கு அவர்களிடத் திலே குடிகொண்டிருக் கிற அச்சந்தான் காரணம். சுவாமி விவே கானந்தர் ஓரிடத்தில் கதறுகிறார்: நான் மனிதர்களை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால், இந்தியா வில் திரீகளும் பேடிகளுந்தான் இருக்கிறார் களென்பது எனக்குத் தெரியும். விவேகானந்தர் செய்துகொண்ட இந்தச் சங்கல்பத்தை காந்தியடிகள் செயலில் கொண்டுவந்து காட்டியிருக்கிறார்.

காந்தியடிகளை ஒரு வீரன் என்று முதலில் குறிப்பிட்டோம். வீரமென்பது புறத்தோற்றத்திலே இல்லை. சீலத்திற்கும் சாந்தத் திற்கும் இடங்கொடுத்து அவைகளைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகிற எந்தத் திண்ணிய நெஞ்சமுண்டோ அந்த நெஞ்சத்திலேதான் வீரத்திற்கு இடமுண்டு காந்தியடிகள் இத்தகைய நெஞ்சுடையவர். ஆனால், இந்த நெஞ்சத்திலிருந்து, இமயம் போன்ற உறுதியான இந்த இருதயத்திலிருந்து, கருணையானது சதா பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் அவருடைய அரசியல் விரோதிகளும் அவரைக்கண்டு அஞ்சவும் அஞ்சு கிறார்கள்; அதே சமயத்தில் பக்தியும் செலுத்துகிறார்கள். ஜான் குந்தர்1 என்ற பிரசித்த பிரயாண நூலாசிரியன், காந்தியடிகளைப் பின்வருமாறு மதிப்பிடு கிறான்:-

காந்தியடிகளின் வாழ்க்கை முழுவதும் வீர வாழ்க்கை யாகவே இருக்கிறது… அவர் விதியை எதிர்த்துப் போராடினார். அது மட்டுமல்ல, அந்த விதியைக் காட்டிலும் வலிமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துப் போராடினார்.

காந்தியடிகளிடத்தில் அஞ்சாமை குடிகொண்டிருக்கிற தென்று சொன்னால், அதற்குக் காரணம் என்ன? இதனைச் சிறிது சுருக்கமாக இங்கு எடுத்துக்காட்ட விழைகிறோம். யாரொருவர், தமக்கென்று ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல், எல்லாம் பிறருக் காகவே என்று வாழ்க்கையை நடத்துகிறாரோ அவர், யாருக்கும் அச்சப்பட வேண்டியதில்லை. உலகத்திற்கு எவனொருவன் அடிமைப் பட்டுக் கிடக்கிறானோ அவன் தான் அஞ்சி அஞ்சி வாழ்க்கையை நடத்துகிறான். உலகத்தை எவனொருவன் அடிமைப் படுத்திக் கொள்கிறானோ, அவன் யாருக்கும் அஞ்சவேண்டுவ தில்லை. உலகத்திலே தோன்றிய ஒவ்வொரு ஜீவராசியும் ஏதோ ஒரு விதமான அச்சத்துடன் தான் வாழ்கின்றது; அதனால் துன்பத்தை யும் அடைகிறது ஸர் எட்வின் ஆர்னால்ட்1 என்ற ஆங்கில அறிஞன் தனது ஆசிய ஜோதி என்ற நூலில், இதை மிக அழகுபடக் கூறி யிருக் கிறான். துறவுத் தத்துவத்தின் ரகசியமே இதுதான். அதாவது, எவனொருவன், தனக்கு, தனக்கு என்று எல்லாவற்றையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு எல்லாரையும் ஆளப் பார்க்கிறானோ அவன் எல்லாவற்றையும் இழந்து எல்லாருக்கும் அடிமையாகி விடுகிறான். அதே பிரகாரம் எவனொருவன், தன்னுடைய சர்வத்தையும் பிற ருடைய நலனுக்காக அர்ப்பணம் செய்கிறானோ அவன் சர்வத்தை யும் அடைகிறான்; சர்வமான பேருக்கும் எஜமானனாகிறான். அப்படித் தன்னுடைய தியாகத்தினால் எஜமான பதவியை அடை கிறவன், யாருக்கு அஞ்ச வேண்டும்? அஞ்ச வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லையே. அஞ்சவும் அவனுக்குத் தெரியாதே. அச்ச மில்லாதவிடத்தில் அன்பு குடிகொள்வது இயற்கை யல்லவா? இதனாலேயே அஞ்சாமையும் அன்பும் ஒரே மரத்திலிருந்து பிரிகிற இரண்டு கிளைகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த மரம் யாது? அதுதான் துறவு. துறவு என்று சொன்னால், தன்னையே இழந்து விடுவது என்று அர்த்தமல்ல. தன்னுடைய தென்று சொல்லி எதனெதன் மீது பற்று வைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பற்றைத் துறந்து விடுவது என்பதுதான் அர்த்தம். அந்தத் துறவானது மனிதத் தன்மையிலே வளர்ந்து சேவையாகப் பரிணமிக்க வேண்டும். தன்மீது வைத்திருக்கும் பற்றைத் துறக்கிறவன் பிறர் மீது காதல் கொள்கிறான். இந்தக் காதலுக்கு பிரேமை என்று பெயர். எனவே, துறவு, அஞ்சாமை, அன்பு, சேவை என்பன ஒன்றை யொன்று பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலி மாதிரி. பர்த்ருஹரி என்ற வடமொழிப் புலவன், தனது வைராக்கிய சதகம் என்ற நூலில், துறவையும் அஞ்சாமையையும் எப்படிப் பொருத்தப் படுத்திக் கூறுகிறான் பாருங்கள்:

செல்வத்திலே வறுமை பயம், அறிவிலே அறியாமை பயம், அழகிலே வயோதிகம் என்ற பயம், புகழிலே புறங் கூறுகிறவர் களைப் பற்றின பயம், வெற்றியிலே பொறாமை என்கிற பயம், தேகாபிமானத்திலே மரண பயம், இப்படி உலகத்திலுள்ள எல்லா வற்றிலும் பயம் குடிகொண்டிருக்கிறது. எவனொருவன் எல்லா வற்றையும் தியாகஞ் செய்து விடுகிறானோ அவன்தான் பயப்படா தவன்.

இத்தகைய அஞ்சாமை காந்தியடிகளிடத்தில் நிரம்பியிருக் கிறது. இதனாலேயே, அஹிம்சை என்பது அவருக்குச் சர்வ சாதாரணமான ஓர் ஆயுதமாயிருக்கிறது.

உத்தம வீரர்களுடைய லட்சணம் என்னவென்றால், அவர்கள் ஆபத்துக்குப் புறமுதுகு காட்டமாட்டார்கள்; ஆனால் ஒரு கொசுவி னிடத்திலும் இரக்கங் காட்டுவார்கள். அவர்கள் ராட்சத பல முடையவர்கள்; அந்தப் பலத்தைத் தமது நலத்திற்காக உபயோகிக் கவே மாட்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் மனிதத்தன்மை குடிகொண்டிருக்கிறது. சுமார் ஒரு தலைமுறைக்கு முன்னர் காந்தியடிகளுக்கு எதிரியாயிருந்த தளபதி மட்1 அவருடைய (அதாவது காந்தியடிகளுடைய) எந்தக் காரியத்திலும் ஒருவித மனிதத் தன்மை குடிகொண்டிருந்ததையே இங்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். அவர் தென்னாப்பிரிக்காவில் சிறையிலிருந்த போழ்து என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடி களைத் தயாரித்து, விடுதலையானவுடன் எனக்குச் சன்மானமாக அளித்தார்! என்று பாராட்டிச் சொல்லியிருப்பதை இங்கு வாசகர் களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

காந்தியடிகளின் ஒவ்வொரு செயலிலும் மனிதத் தன்மை ஒளிவிட்டு வீசுவதாலேயே அவரை ஒரு மனிதர் என்று அழைக் கிறோம். வெளிப் பார்வைக்கு அவர் எல்லோரையும் போல் ஒரு சாதாரண மனிதராகவே காணப் படுகிறார். எல்லா மகான்களும், எல்லா வீரர்களும், எல்லாத் தியாகிகளும் இப்படித்தான் காணப்படு கிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளமானது, எவ்வித சஞ்சலத்திற்கும் இடங்கொடாமல் சாந்தமாக இருக்கிறது. ரோமெய்ன் ரோலந்து,2 காந்தியடிகளைப் பற்றிக் கூறும் ஒரு வாக்கியம் இங்குக்கூர்ந்து நோக்கத்தக்கது:-

அவருடைய அறிவு, அமைதியாகவும் தெளிவாகவும் இருக் கிறது. அவருடைய இருதயம், தான் என்ற அகங்காரமில்லாமல் இருக்கிறது. மற்றெல்லா மனிதர்களைப் போல அவரும் ஒரு மனிதரே.

மகா புருஷராகவும், வீரராகவும், மனிதராகவும் முக்கோணத்திலிருந்து நமக்குக் காட்சியளிக்கிற காந்தியடிகள் இன்று எழுபத்து மூன்றாவது வயதையடைந்திருக்கிறார். அவருடைய வயது முதுமை யாகிக் கொண்டு போகிறது; ஆனால் அவருடைய வாழ்வு இளமை யாகிக் கொண்டு வருகிறது. வயதாக ஆக, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ள வேண்டு மென்று சொல் வார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கை, வயதாக ஆக விரிந்து கொண்டு போகிறது. அவர் ஒரு ஞானி போலிருக்கிறார். ஆனால் உலக மெல்லாம் அவருக்குக் குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும், பொருளும் வேண்டு மென்று பிச்சை கேட்கிறார். ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக் காண ஏழைமக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக் கணக்கானவர்களுடைய நிரந்தர உபவாசத்தைத் தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர் களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்றுகோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்கு தாம் ஓர் ஊன்றுகோலாயிருக்க வேண்டுமென்ற ஆவலினால். அவர், கோடிக் கணக்கான மக்களால் வணங்கப்படுகிறார். ஆனால், அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத் தான் வணங்குகிறார். அவருடைய லட்சியத்திலே, அதாவது பாரத ஜாதியின் மகோன்னத வாழ்விலே நமது பார்வையைத் திருப்பி, அந்த நல்வாழ்வுக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதன் மூலம் அவரை வணங்குவோமாக.


மகா புருஷன்

தேச மக்களிடத்திலே யாகட்டும், தற்காலிகமாகவாவது அரசாங்க உத்தியோகதர்களிடத்திலே யாகட்டும், ஒரு நம்பிக்கை யையும், நற்காலத்தை எதிர்பார்க்கும் ஆவலையும் உண்டுபண்ணிய மகா புருஷனை இச் சமயத்தில் நாம் நினைக்கத்தான் வேண்டியிருக் கிறது. ஷ்வேகான் கிராமத்தில் ஒரு சிறு குடிசையில் ஆண்டியாக அவர் வசித்தாலும், ஒவ்வோர் இந்தியனுடைய இதயக் கோயிலிலே அவர் ஆண்டவனாகப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். அவ ருடைய 69-வது ஜனன விழாக் காலத்தின் போது1 நமது கடமை என்ன? அவருடைய படத்தை வைத்து ஊர்வலம் வருவதா? அவர் பெயரைச் சொல்லி பிரசாதங்கள் தின்பதா? இல்லை; இல்லை. இந்தியாவின் பரிபூரண சுதந்திரம் என்ற லட்சியத்திலே அவருடைய பார்வை இருக்கிறது. அவ்வழியிலேயே நமது பார்வையையும் திருப்ப வேண்டும். காந்தியடிகள் எப்படி, தம்மைத் தேசீய வாழ்க்கை யோடு பிணைத்துக் கொண்டு விட்டாரோ அது போலவே நாமும் நமது வாழ்க்கையை, தேசத்தோடு பிணைத்து விட வேண்டும். நம்மால் தேசம் ஆக்கப்பட வேண்டுமே தவிர, தேசத்தினால் நாம் ஆக்கப்பட வேண்டிய காலம் மலையேறிவிட்டது. இந்த ஆக்க வேலையில் இன்றே இறங்குவோமாக!


அந்தகாரத்தினிடையே ஒளி

இந்த அடர்ந்த யுத்த அந்தகாரத்தினிடையே, ஆடாமல் அசையாமல் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு பிரகாசந்தான் நமக்கு ஒருவித ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. அந்தப் பிரகாசந்தான், சாந்த மயமெனயிலங்கும் காந்தியெம் பெருமான். அவருடைய எழுபதாவது பிறந்த தினத்தை 02.10.38இல்1 கொண்டாடும் படியான பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. யுத்த வெறிபிடித்து மேலைநாடுகள் அலைந்து கொண்டிருக்கிற இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அஹிம்சா தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசீயப் படையை வகுக்க ஏற்பாடு செய்து கொண் டிருக்கிறார். இதற்கு எவ்வளவு ஆன்ம பலமும் மனோ உறுதியும் தேவை யென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. ஆயுத பலம் பயன் பெறாமையை நாம் அபிசீனியாவிலும், பெயினிலும், சீனா விலும் கண்டு விட்டோமென்றும், இந்தியாவும் அந்தமார்க்கத்தில் பின்பற்றிச் செல்லாது, உலகத்திற்குச் சமாதான பாதையைத் திறந்து விடும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறியிருப்பது நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது? அவ ருடைய அஹிம்சைப் படையின் திட்டங்கள் இன்னும் நம் கைக்குக் கிட்டவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், காங்கிரஸே ஒரு பெரிய மாறுதலடையுமென்பது நிச்சயம். 1920ஆம் வருஷத்தில், காந்தியடிகளின் மேற்பார்வையில் எப்படி காங்கிர மஹாசபை பெரிய மாறுதலையடைந்ததோ அதைப் போன்று இப்பொழுது - பதினெட்டு வருஷங்கள் கழித்து - காங்கிர ஒரு பெரிய மாறுதலை யடைகிறது. இந்த மாறுதலின்படி, காங்கிரஸின் எண்ணிக்கை சுருங்கலாம்; ஆனால் சக்தி அதிகரிக்கும் என்பதில் ஐயமேயில்லை. இதைக் காந்தியடிகள் வற்புறுத்திக் கூறுகிறார். இப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பத்தில், நமக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே, காந்தியடிகளின் சேவை மிகவும் அவசியமாயிருக்கிறது. ஆக, உலகத்தினரனைவரும் உச்ச வரத்தில் காந்தியடிகள் நீடூழி வாழ்க என்று மனமார வாழ்த்துவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?


பின்பற்றுவோர் தேவை

பூரி என்பது ஒரிஸா மகாணத்திலுள்ள ஒரு க்ஷேத்திரம். இதற்கு ஜகந்நாதம் என்றும் பெயர். உலக சகோதரத்துவம் இங்கே பரிபூரணமாக நிரம்பியிருப்பதாக ஐதிகம். ஆனால் இங்குள்ள கோயிலுக்குள் ஹரிஜனங்கள் விடப்படுவதில்லை. மகாத்மா காந்தி, தமது பரிவாரங்களுடன் சமீபத்தில் நடைபெற்ற காந்தி சேவா சங்க மகா நாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஒரிஸ்ஸாவுக்குச் சென்றிருந்தாரல்லவா? அப்பொழுது ஜகந்நாத க்ஷேத்திரத்திலுள்ள கோயிலுக்குள் ஸ்ரீ கதூரிபாய் காந்தியும், ஸ்ரீ மகாதேவ தேசாயின் பத்தினியும், இன்னும் சிலரும் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள். இதுதான் சுருக்கமாக நடைபெற்ற விஷயம். ஆனால் இது காந்தியடிகளுக்கு ரத்தக் கொதிப்பு உண்டாக்கிவிட்டது. அவருடைய மனத்தில் ஒரு பெரிய சமுத்திரம் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது. இது வேடிக்கையாக இல்லையா?

மகாத்மா காந்தி, ஹரிஜனப் பணிசெய்து கொண்டு வருகிறார். ஹரிஜன இயக்கத்தின் தலைவர் அவர். ஹரிஜனங்களுக்கு எங்கு உரிமைகள் மறுக்கப் படுகின்றனவோ, அங்கு அவரோ, அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் அவருடைய சிஷ்யர் களோ சென்று உரிமைகளை அனுபவிக்கலாமா? அப்படியானால் அவர், உண்மை யாகவே ஹரிஜன இயக்கத்திற்குத் தலைவராக இருந்து நடத்த முடியுமா? சங்கடமான கேள்வி. ஆனால் முக்கியமானது.

இந்த ஒரு சிறிய சம்பவம், காந்தியடிகள் ஒழுக்கத்திற்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை நன்கு காட்டுகிறது. ஒழுக்கம் என்பது என்ன? கற்ப நிலை கெடாமலிருப்பது மட்டுந் தானா? எதிர்மறையிலே இதற்கு இந்தப் பொருளைச் சொல்லி திருப்தியடையவில்லை பெரியோர்கள். மனிதத் தன்மைகள் என்று எவைஎவைகளை நாம் கொண்டாடுகிறோமோ அவை யனைத்தை யும் ஒரு தொகுதியாகச் சேர்த்து, அத்தொகுதிக்கு ஒரு சிகரம் அமைப்போமானால் அதுதான் ஒழுக்கம். இதனாலேயே உயிரினும் சிறந்ததாக ஒழுக்கத்தைக் கூறினார் திருவள்ளுவர். ஒழுக்கம் என்பது இருதய சுத்தத்தின் பூரணத்துவம்; மானிட வாழ்க்கையின் ஜீவ நாடி; உலகத்தை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டு போகும் ஒரு சக்தி. இந்த உயர்ந்த நிலையிலிருந்து தான் ஒவ்வொரு சம்பவத்தையும் காந்தியடிகள் கவனிக்கிறார். 1922ஆம் வருஷம் சௌரி-சௌரா சம்பவம் நடைபெற்று அதன் விளைவாகச் சத்தியாக்கிரக இயக் கத்தை நிறுத்தியது முதற் கொண்டு, இந்தியாவின் அரசியல் வளர்ச்சியை நாம் கவனித்துப் பார்த் தோமானால், ஒழுக்கமென்ப தனை அரசியலில் கொண்டு புகுத்த காந்தியடிகள் எவ்வளவு முயன்றிருக்கிறார் என்பது நன்கு தெளிவாகும்.

மகான்கள் யார்? பிறருக்காக உபதேசிப்பவரா? இல்லை. பிறருக்காக வாழ்பவர்; மற்றவர்களுடைய நலத்திலே தன்னலத்தைக் காண்கிறவர். இவர்களால் தான் உலகத்தைச் சீர்திருத்த முடியும். இவர்களுடைய சொல்லுக்குத்தான் மதிப்புண்டு. அப்படிப்பட்டவர் தான் இந்தியாவுக்குத் தேவை. நார்மன் மாக்லியாட் என்ற ஓர் ஆங்கில அறிஞன் கூறுகிறான்:-

உயிருள்ள மனிதர்கள் நமக்குத் தேவை. அவர்களுடைய அறிவோ, அவர்களுடைய செல்வமோ நமக்குத் தேவையில்லை. அவர்களே நமக்குத் தேவை. அவர்களுடைய கண்களில் வழியும் அருளை, ஏழைகள், உணவில்லாதவர்கள், உடையில்லாதவர்கள், தீண்டாத வர்கள், மன முடைந்துபோனவர்கள் முதலியோர் பார்க்க வேண்டும்; உணர வேண்டும்; அதிலே சாந்தியடைய வேண்டும்.

இந்த வாக்கியங்கள், காந்தியடிகளைப் பார்த்துச் சொல்லப் பட்டன போலில்லையா? இத்தகைய மகான்கள், தம்மைப்போல், தம்மைச் சுற்றியிருப் போரையும் ஆக்க வேண்டுமென்பதிலே முனைந்து நிற்கிறார்கள். இதற்காகப் பல இன்னல்களை அனுபவிக்கத் தயாரா கவும் இவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால், இவர்களுடைய லட்சிய மெல்லாம் சத்தியத்திலும் அஹிம்சையிலும் தோய்ந்து நிற்கிறது. காந்தியடிகள் அரசியலில் இறங்கியதும் இந்த லட்சியத்திற் காகத்தான்.

இனி காந்தியடிகளின் வாக்கைச் சிறிது கேட்போம்:-

நாம் செய்து வருகிற நிர்மாண வேலைத் திட்டங்கள் யாவும் சத்தியம், அஹிம்சை இவற்றின் புற விகாசங்கள்தான். இந்த நிர்மாண திட்டங்களை எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறோமோ அவ்வளவு தூரம் அஹிம்சை பாதையிலும் சத்திய மார்க்கத்திலும் சென்றவர்களாகிறோம். இது கடைசியில் சுதந்திரத்தில் நம்மைக் கொண்டு சேர்ப்பிக்கிறது. அஹிம்சையின் பூரண விகாசங்களுள் தீண்டாமையும் ஒன்று. தீண்டாமை ஒழியா விட்டால் ஹிந்து மதமே அழிந்து விடுதல் நல்லது என்பது என்னுடைய பிரார்த்தனை. அதுவே உங்களுடைய பிரார்த்தனையுமா யிருக்கவேண்டும். ஹரிஜனங் களுக்குக் கோயில்களைத் திறந்துவிட வேண்டுமென்ற நோக்கத் துடன் நான் ஹரிஜனயாத்திரை செய்து இந்த உண்மையைக் கண்டேன். தீண்டாமை விலக்கில் நம்பிக்கையுள்ளவர்கள், ஹரி ஜனங்களுக்கு அனுமதி மறுக்கிற கோயில்களுக்குள் செல்லக்கூடா தென்று நான் வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். அப்படி யிருக்க என் மனைவியும் என் புத்திரிகளும் அப்படிப்பட்ட கோயில் களுக்குச் செல்வார்களானால் அதை நான் எப்படிப் பொறுப்பேன்? அத்தகைய கோயில்களுக்கு செல்ல வேண்டாமென்று அவர் களோடு மன்றாடிப் பார்ப்பேன். முழந்தாளிட்டு அவர்களைப் பணிந்து கேட்பேன். என்னுடைய இந்த முறையீடுகள் பலிக்கா விட்டால், அவர்களோடு நான் வைத்துக் கொண்டிருக்கும் உறவை அறுத்துக் கொள்வேன். இந்தக் கொள்கையின் படியே இத்தனை வருஷங்களாக என் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்து வந்திருக் கிறேன். அப்படி யிருக்க, என் மனைவியும், என்னால் என்னுடைய புத்திரிகளென்று கருதப் பெறும் வேறு இரண்டு ஆசிரம வாசிகளும் பூரி கோயிலுக்குச் சென்றார்கள் என்று நான் கேள்விப்பட்ட போழ்து, அவமானத்தினால் தலைகுனிந்தேன். நான் வீழ்ந்துபடுவ தற்கு இந்தத் துன்பம் போதுமானதாயிருந்தது. வைத்தியர்களின் பரிசோதனை யந்திரம், என் தேகத்தில் ரத்தக் கொதிப்பு அதிகமாக ஏறியிருப்பதாகக் காட்டியது. ஆனால் யந்திரத்தை விட என் நிலைமையை நான் நன்றாக அறிந்து கொண்டேன். யந்திரம் காட்டியதை விட நான் கேவலமான நிலைமையில் இருந்தேன். பற்றில்லாமல் இருக்கவேண்டு மென்று கீதை கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகளிலிருந்து, நம்மிடத்தில் நெருங்கியவர்கள் அவர்கள் கடமைகளைச் செய்யாமலிருப்பதால் ஏற்படும் அதிர்ச்சிகளி லிருந்து பாராமுகமாக இருக்க வேண்டுமென்பது அதன் அர்த்தமல்ல. பூரி கோயிலுக்குச் சென்றவர்களை நான் குறை கூறமாட்டேன். அவர்கள் அறியாமையினால் சென்றார்கள். ஆனால் அவர்களுடைய தர்மம் இன்னது என்பதை எடுத்துச் சொல்லாமல் இருந்த என்னுடையவும் மஹா தேவ தேசாயினுடையவும் குறை அது. (என்னிடத்தில் நெருங்கிய உறவு பூண்ட அவர்கள்) இங்ஙனம் கோயிலுக்குச் சென்றதனால் சமூகத்தில் என்ன விதமான கொந்தளிப்பு ஏற்படும் என்பதை மஹாதேவ் உணர்ந் திருக்க வேண்டும் பூரி

கோயிலுக்குள் சென்றுவருமாறு அவர்களுக்கு நான் கூறவில்லை. ஹரிஜனங்கள் எதுவரையில் அனுமதிக்கப் படுகிறார்களோ அது வரையில் சென்று, அதற்கு மேல் போக மறுத்துத் திரும்பி வந்திருந் தால் அது, ஹரிஜன இயக்கத்திற்குப் பெரிய பிரசாரமாக இருந் திருக்கும்; ஹரிஜனத் தொண்டு செய்ததாகவும் இருக்கும். குப்பை கூட்டுவதோ, ஹரிஜனங் களோடு சேர்ந்து உண்பதோ, அல்லது அவர்களுக்கு ஆகாரமளிப்பதோ போதாது. ஹரிஜனங்களுடைய உபயோகத்திற்கு இடம் பெறாத கோயில் முதலியவற்றிற்கு நாம் செல்ல மறுக்க வேண்டும்.

இந்த வாக்கியங்களிலிருந்து காந்தியடிகள் செயலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது நன்கு புலனாகிறது. இதுவே இந்தியாவின் புராதன லட்சியமாயிருக்கிறது. அந்த லட்சியத்தை மீண்டும் நிலை நிறுத்தவே அவர் பாடுபட்டு வருகிறார்.

ஒரு தேசத்தின் பெருமையை எப்படி அளந்து பார்ப்பது? அதன் விதீரணத்தினாலா? அதன் ஏற்றுமதி இறக்குமதிப் பெருக்கத்தினாலா? இல்லை; இல்லை. அஃது உற்பத்தி செய்கிற மகா புருஷர்கள் செய்யும் அரிய காரியங்களினாலேயே அது பெருமை யடைகிறது. இந்தியாவை இப்பொழுது வெளிநாட்டார் அறியத் தொடங்கியிருக்கின்றனரென்றால் அது மகாத்மா காந்தியி னால்தான். காந்தியின் இந்தியாவே தவிர, இந்தியாவின் காந்தியல்ல. வெளிநாடுகளிலே சுற்றுப்பிரயாணம் செய்கிறவர்களுக்குத்தான் இந்தச் சொற்றொடரின் முழு அர்த்தம் தெரியும்.

இந்த ஒரு சிறிய சம்பவம் இந்தியாவின் பொது வாழ்விலே ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலே ஒருவிதமாகவும் பொது வாழ்க்கை யிலே வேறொரு விதமாகவும் இருந்து நடிக்கிறவர்கள் இனி அப்படிச் செய்யமுடியாது. அப்படிப் பட்டவர்களால் இந்தியா முன்னேற் றத்தை அடைய முடியாது. காங்கிரஸுக்கு இப்பொழுது அதிக மான மதிப்பு இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், உள்ளும் புறமும் ஒத்த உண்மையாளர்கள் பலர் அதில் இருக்கிறார்கள் என்பதே. எனவே, அரசியல் வாதிகளின் பொறுப்பு அதிக மாகிற தென்று மட்டும் சுருக்கமாக இங்கு எச்சரிகை செய்ய விரும்புகிறோம்.

மகாத்மா காந்தி, அஹிம்சா தர்மத்தின் மூலமாகத்தான் உலகம் நல்வழிப்பட முடியும் என்று இருதய பூர்வமாக நம்புவ தால்தான் அவரை உலகம் போற்றுகிறது. போற்றுவதோடு நில்லா மல் அவரைப் பின்பற்றக் கூடிய காலம் விரைவிலே வரப் போகிறது. மேலைநாட்டு வல்லரசுகள் ஆயுத பலத்தைக் கொண்டுதான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற பொய் நம்பிக்கை யில் ஈடுபட்டு, தலை கால் தெரியாமல் அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அதற்கும் ஓர் எல்லையுண்டல்லவா? அந்த எல்லையை அவை அடையும் பொழுதுதான், ஆயுத பலத்தின் பயனற்ற தன்மையும், அஹிம்சா தர்மத்தின் சிறப்பும் நன்கு தெரியப் போகின்றன. அன்றுதான், காந்தியடிகள் உலக சிரேஷ்டராகப் போற்றப்படுவார். உலகத்து ராஜ தந்திரிகள் அவர் அடியின் கீழ்ப் பணிந்து நிற்கப் போகிறார்கள். அந்தக்காலம் வெகுதூரத்தில் இல்லை யென்பதை மட்டும் நாம் நன்கு உணர்கிறோம்.

இப்படி நாம் உணர்வதற்கு ஆதாரங்களில்லாமல் இல்லை. மத்திய மாகாண அரசாங்கத்தினர் தொடங்கியிருக்கும் வித்தியா மந்திரத் திட்டப் படி வார்தாவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கூடம் 21.04.38இல் திறக்கப் பட்டது. அப்பொழுது காந்தியடிகள் பேசி யிருப்பதை அன்பர்கள் கவனிக்க வேண்டும்.

ஹிட்லர், கத்தி பலத்தைக் கொண்டு தன் லட்சியத்தை அடையப் பார்க்கிறார். நானோ ஆத்ம பலத்தைக் கொண்டு என் லட்சியத்தை அடையப் பார்க்கிறேன். மேலைநாட்டு எண்ணங்களை அறவே விட்டு ஒழியுங்கள். கிராமவாசிகளுடன் ஒன்று படுங்கள். அவர்கள் வாழ்க்கையை வாழுங்கள். மேலைநாட்டார் அழிவு தரத்தக்க பயிற்சியையே அளித்துக்கொண்டிருக் கிறார்கள். நாம் அஹிம்சா தர்மத்தின் மூலம் பயன் பெறத்தக்க பயிற்சியை அளிப்போம்.

இந்தச் சில வாக்கியங்களிலிருந்து நமது நம்பிக்கை வலுப் படுகிறது.

தேசங்கள், தனிமனிதர்களைப்போல் தங்கள் புராதனப் பெருமையிலே பலம் பெறுகின்றன. அந்தப் பெருமை அழிந்து படாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்ற உறுதியிருந்தால்மட்டும் அந்த நாடு வாழ முடியும். அப்படிப்பட்ட பெருமையிலே நாம் ஒரு காலத்தில் திளைத் திருந்தோம். ஆனால் இடைக் காலத்தில் எவ்வளவோ சிறுமைகள் பட்டோம். அவற்றை நிகழ்கால அனுப வங்களாகக் கொண்டு நாம் எதிர்காலத்தில் எவ்வளவு ஜாக்கிரதை யுள்ளவர்களாயிருக்க வேண்டு மென்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. நமது புராதனப் பெருமையை நிலை நிறுத்தி அதன் வாயி லாக உலகத்திற்கு வழி காட்ட காந்தியடிகள் முயன்று வருகிறார். அவரை உண்மையிலே பின்பற்றுவோர் இப்பொழுது தேவை. அந்தத் தேவையை நாம் எவ்வளவு விரைவிலே அறிந்து பூர்த்தி செய்கிறோமோ அவ்வளவு நமது நாட்டிற்கும் நல்லது; உலகத் திற்கும் நல்லது.


பாரத ஜாதியின் ஆத்மா

காந்தியடிகள், இந்தியாவின் வாழ்க்கையைப் பிரதி பலிக்கிறவ ராயிருக்கிறார்.1 அவருடைய சேவையில் இந்தியா நம்பிக்கை வைத் திருக்கிறது. ஏனென்றால் இந்தியாவின் அழியாத வாழ்விலே அவருக்கு நம்பிக்கை உண்டு. யாரொருவருக்குத் தன்னம்பிக்கை அதிகமாயிருக் கிறதோ, அவரைத்தான் எல்லா ஜனங்களும் நம்பு வார்கள். காந்தியடிகளின் மகத்தான செல்வாக்குக்கு இதுவே காரணம்.

காந்தியடிகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளில் அபிப்பிராய வேற்றுமைகள் இருக்கலாம். நவயுகத்தின் நாடித் துடிப்பின் மீது அவர் கை வைக்கவில்லையென்று இளைஞர்கள் கருதலாம். ஹரிஜன இயக்கத்தைத் தோற்றுவித்து, அது காரணமாக ஹிந்து மதத்திற்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று சநாதன தர்மம் கூச்சல் போடலாம். ஆனால், அருவமாயுள்ள பாரத ஜாதியின் ஆத்மாவின் உருவமாயிருக்கிறார் காந்தியடிகள் என்பதை யாருமே மறுக்க முடியாது.

பாரத ஜாதியின் ஆத்மா எங்கேயிருக்கிறது? துறவிலே; தியாகத்திலே; எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்று மறியாத எண்ணத்திலே. பாரதஜாதி அழியாமலிருப்பதற்கு இதுவே காரணம். நமது பாரத மாதாவின் பேரன், பேர்த்திகளெனத் தகும் ராஜ்யங்களும், நாகரிகங் களும் அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் நமது தாய் இன்னும் கன்னிப் பருவத்தினளாகவே இருக்கிறாள். அவள் மீது மாசுமறுக்கள் படர்ந்திருக்கின்றன வென்பது உண்மை. தற்போது, அவளை எல்லோரும் திரகரிக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆயினும் அவளுடைய அந்தராத்மா சிதைக்கப் படாமலே இருக்கிறது. இதனாலேயே அவள் வற்றாத ஊற்றாகவும், வாடாத மலராகவும் காட்சியளிக்கிறாள். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? பாரத ஜாதியின் துறவு மனப் பான்மைதான். துறவு பூண்டவர்களே பாரத நாட்டின் தலைவர்களாகக் கௌரவிக்கப் பட்டு வந்திருக்கிறார்கள். துறவு என்றால் புறத் துறவு அல்ல; அகத் துறவையே குறிப்பதாகும்.

காந்தியடிகளின் கோலம் இந்தியாவின் கோலமாகும். அவருடைய உள்ளம், புராதன இந்தியாவின் பிரதிநிதியாகவும், அவருடைய வெளித் தோற்றம், தற்கால இந்தியாவின் பிரதிநிதி யாகவும் விளங்குகின்றன. அதனாலேயே பழைய வாசனையிலேயே தோய்ந்துகிடக்கும் பணக்காரர் களும், புதிய வாசனையை நுகர வேண்டுமென்ற ஆவல் கொண்ட ஏழைகளும் அவரைப்பின் பற்று கிறார்கள். அவருடைய வார்த்தையில் பெருமையும் நம்பிக்கையும் முறையே கொள்கிறார்கள்.

மகாத்மா காந்தி ஒரு சிறந்த கர்மயோகி. அவர் உழைப்பிலே தான் இன்பங் காண்கிறார். உழைப்பின் பலனைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. லட்சியத்திற்கு எந்த விதமான புனிதத் தன்மை இருக்க வேண்டு மென்று கருதுகிறாரோ, அதே விதமான புனிதத் தன்மை அந்த லட்சியத்தை அடைவதற்குரிய சாதனங் களுக்கும் இருக்க வேண்டு மென்று கருதுகிறார். இதனாலேயே எல்லாருடைய அன்பையும் மரியாதையும் பெறுகிறார். நமது பூர்விக ரிஷிகளின் மகோன்னதமான வாழ்க்கையும் இத்தகைய தாகவே இருந்தது.

எப்படி கடவுள் ஒருவர்தானோ, அப்படிப்போல எல்லா மதங் களுக்கும் அடிப்படையான மதம் ஒன்றுதான் என்ற உண்மையை, மகாத்மா காந்தி தமது அன்றாட வாழ்க்கையின் மூலமாக நிரூபித்துக் காட்டி வருகிறார். இதனாலேயே எல்லா மதத்தினரும் அவரை ஓர் ஆசாரிய புருஷனாகக் கொண்டாடுகிறார்கள். ஸத்தியம் வத; தர்மஞ் சர என்ற அருமையான வாக்கியந்தான், எல்லா மதக் கோட்பாடுகளுக்கும் அதிவாரமாயமைந்திருக்கிறது. இந்த அடிப்படையின் மீதே, காந்தியடிகள் தமது வாழ்க்கையாகிற வீட்டை அமைத்துக் கொண்டு விட்டார். இதனாலேயே, இந்த வீடு எல்லாருக்கும் நிழல் கொடுக்கிறது; எல்லாரும் இதில் இன்பங் காண்கிறார்கள்.

பகைவனுக்கு அருளும் நெஞ்சம் திண்ணிய நெஞ்சமாக இருக்க வேண்டும். அந்த உள்ளத்தில் எவ்விதமான கறைகளும் இருக்க முடியாது. கடவுள் எங்கும் அன்பு மயமாய்த் திகழ்கிறார் என்ற தளராத நம்பிக்கை தான், சத்துருக்களிடத்திலும் அன்பு காட்டும் மனப் பான்மையை நல்கும். இந்த அன்பானது, ஜாதி, மதம், நாடு, மொழி, காலம், திணை, பால் முதலிய அனைத்தையும் கடந்து நிற்பது. இதுவே விசுவப் பிரேமை என்று சொல்லப்படுவது. நமது முந்தையோர் மொழிந்த நூல்கள் பலவற்றுள்ளும் இந்த உண்மை தான் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கையின் லட்சியம் இதுவாகவே இருக்க வேண்டுமென்று நமது பெரி யோர்கள் ஒரே குரலுடன் முழக்கம் செய்து விட்டுப் போயிருக்கி றார்கள். இந்த முழக்கத் திற்கு எதிரொலி கொடுப்பது போலவே, காந்தியடிகளின் வாழ்க்கையும் உபதேசங்களும் இருக்கின்றன. இதனாலேயே, அவரை உலகம் தீர்க்கதரிசி யென்று போற்றுகிறது. இதே மாதிரி அவரை இன்னும் பல்லாண்டுகள் உலகம் போற்றிக் கொண்டிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.


ரவீந்திரநாத் தாகூரின் அஞ்சலி

மகான்கள் செய்து விட்டுப்போகிற காரியங்கள் யாவும், காலத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவைகளா யிருக்கின்றன. ஆனால் அவர்கள் செய்கிற காரியங்களுக்கு அடிப்படையா யிருக்கிற தியாகம், எத்தகைய அளவு கோலாலும் அளக்க முடியாது. மகாத்மா காந்தியின் தொண்டுகள் உலக மறிந்தவை. ஆனால் அவர் காரியங்களுக்கு அடிப்படையாயுள்ள ஆன்ம சக்திதான் நமக்கு முக்கியமானது. அவர், சத்தியத்திற்குத் தம்மை அர்ப்பணஞ் செய்து விட்டார். அசைக்காத உறுதி பூண்டவர் அவர். எதற்கும் அஞ்சா தவர். தாம் செய்கிற காரியங்களுக்குப் பயன் கருதாதவர். அவ ருடைய வாழ்க்கையில் இவைதான் முக்கிய அமிசங்களாய் விளங்கு கின்றன.

காலத்திற் கொத்தாற்போல், அரசியலைப்பற்றி நாம் கொண் டுள்ள கொள்கைகளும் மாறுபடுகின்றன. இதே மாதிரி சமூக வாழ்விலும் நாம் காலத்திற்குத் தகுந்தபடி நம்மை நாம் மாற்றி யமைத்துக் கொள்கிறோம். ஆனால் மகாத்மா காந்தியினால் பொது வாழ்க்கையில் - அதாவது அரசியல் வாழ்க்கையில் - புகுத்தப் பெற்ற சத்தியம் என்றும் நிலைத்து நிற்கும். ஒழுங்கான வஞ்சக முறைகள் அரசியலில் கையாளப்பட்டு வருங்காலத்தில், மகாத்மா காந்தி, அரசியல் சமரஸப் பேச்சுக்களில், சத்தியப் பாதையிலேயே சென்றார். சில்லரை வேலைத் திட்டங்களும் நபர்களின் அபிப்பிராயங்களும் அவர் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆரம்பத்திலிருந்து அவர் ஒழுக்கத்தைத்தான் குறிக்கோளாகக் கொண்டார்.

தேசத் தொண்டு செய்யும் விஷயத்தில் மகாத்மா காந்தி இந்த சத்திய மார்க்கத்தைக் கடைப் பிடித்தார். நமது நாட்டுக்கு எப் பொழுதுமே மனிதத் தன்மையில் அதிக நம்பிக்கை யுண்டு. அத னுடன், மகாத்மா காந்தியின் உண்மை கடைப் பிடிக்கிற முறையும் சேர்ந்து இப்பொழுது சோபிக்கிறது. நமது கிராமங்களிலே வசிக்கிற ஜனங்களுக்கு மகாத்மா காந்தி, தமது பூராவையும் கொடுத்திருக்கிறார்; அப்படியே ஒடுக்கப்பட்ட ஜாதியாருக்கும் அளித்திருக்கிறார். நமது தேசீய வாழ்வுக்கு அதிவாரமாயமைந்திருப்பது, அரசியலையே தொழிலாகக் கொண்ட ஒரு சில அரசியல்வாதி களல்ல; பொது ஜனங்களே என்ற உண்மையை அவர் உணர்த்தினார்.

காங்கிர ஆரம்ப காலத்தில், பாட்னாவில் நடைபெற்ற ஒரு மாகாண மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்கும்படி நேரிட்டது. கிராம ஜனங் களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய ஓர் உரிமையை அளிக்க வேண்டு மென்று நான் கூறினேன். அப்பொழுது ஓர் அரசியல் நண்பர், என்னுடைய இந்த அபிப்பிராயத்தைக் கண்டு சிரித்தார்.

அந்தக் காலத்தில் நமது முகமெல்லாம் மேற்குப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது. படித்த வகுப்பினர் என்று சொல்லப் படுவோர், தங்களுடைய எஜமானர்களை சதா பூஜித்துத் திருப்தி செய்வதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர். இப்பொழுது அந்த நிலைமையெல்லாம் மாறிவிட்டன. இப்பொழுது அந்த மகான் - மகாத்மா காந்தி - நமக்குப் புகட்டிய அன்பு முறையில் நம்மவர்கள் பெருமை கொள்கிறார்கள். நம்மிடத்திலே இதுகாறும் உறங்கிக் கிடந்த சிருஷ்டி சக்தி இப்பொழுது திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணராயிருந்தவர் மகாத்மா காந்தி என்பதைச் சொல்ல வும் வேண்டுமோ?

கீளார் கோவணமுடுத்து நிற்கும் இந்த மகாத்மாவுக்கு, அவ ருடைய பிறந்த தினத்தன்று நம்முடைய வணக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. சாந்திநிகேதன ஆசிரமவாசிகளின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும், இந்த மகானுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.